Thursday, June 29, 2006

தங்கள் கருத்து யாதோ?

தமிழகத்தில் நிலம் கிரயம் செய்பவர் பெறுவர் தங்களது போட்டோவை பத்திரங்களில் ஒட்டவேண்டும் :- செய்தி
இது எந்த அளவிற்கு சாத்தியம்
  1. ஒருவர் தனது போட்டோவை போலி பட்டா பாஸ்புத்தகத்திலும் ஒட்டி கொண்டு வந்தால் அந்த ஆவணத்தை பதிவு செய்யலாம் அல்லவா
  2. இவர் கிரயம் பெற்ற ஆவணத்தில் அந்த போட்டோ எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் பசை பழுதாகி போட்டோ அந்த ஆவணத்தை விட்டு கழன்று விட்டால் என்ன செய்வது
  3. சிறு வயதில் கிரயம் பெற்று வயதான காலத்தில் விற்றால் எப்படி அடையாளம் தெரியும்.
சரி தவறு நடக்கின்றது உண்மை தான் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி போன்ற பகுதிகளில் தவறு நடைபெற்றுள்ளது. அதை எப்படி தடுப்பது
  1. அனைத்து நில உரிமையாளர்களது போட்டோ அவரது வாரிசுகள் அவர்களது போட்டோ நில உரிமையாளர்களது முழுவிபரம் அவருக்கு எந்த எந்த ஊர்களில் சொத்து உள்ளது அதன் புல எண் பரப்பு அவரது குடும் அட்டை எண் கல்விதகுதி அவரது சாதி தொழில் டிரைவிங் லைசென்ஸ் எண் போன்ற வற்றை கம்யூட்டரில் ஏற்றி இணைய தளத்தில் வைத்துவிடலாம்.
  2. இதனால் ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்கள் யார் என தெரியவரும் மேலும் பினாமிகள் வரமல் தடுக்கலாம்.
  3. அவர் நிலத்தை விற்றவுடம் அவரது சொத்துப்பட்டியலில் இருந்து நீக்கி சொத்தை பெற்றவர் சொத்துப் பட்டியலில் சேர்த்து விடலாம் அதே நேரத்தில் ஆவணப் பதிவு எண்ணையம் சேர்த்து விடலாம் . இன்றுள்ள நடைமுறைப்படி ஒரு வெள்ளைத்தாளில் பதிவு செய்து 8 விழுக்காடுகளுக்குள்ள தொகையை சார்பதிவகத்தில் செலுத்திவிடாலம் முத்தரைத்தாள் மோசடியும் இங்கு வராது. அல்லது பெயரளவிற்கு 100 மதிப்புக்கு ஒருதாள் வாங்கிக் கொள்ளலாம்
இது எனது கருத்து தங்களது கருத்துகள் யாதோ?

தான் பெற்ற மகனையே கொல்வதா?

அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றிருந்த போது மணிபுரியை அடுத்த வனத்தில் மணிபுரி ராஜகுமாரியான சித்ராங்கியைக் கண்டான். இருவரும் காதல் கொண்டார்கள். சித்ராங்கிக்கு அரவான் என்னும் அருமைப் புதல்வன் பிறந்தான். மலைநாட்டுக் கோமகளுக்கு அர்ச்சுனனால் பிறந்த மகனாதலால் அரவான் மகா வீரனாயிருந்தான். பாரத யுத்தம் நடக்கப் போகிறது என்று அறிந்து அவனும் பாண்டவர் படையில் சேர வந்து சேர்ந்தான். போர் தொடங்குவதற்கு முன்னால் சகல இலட்சணங்களும் பொருந்திய மகா வீரனான இளைஞன் ஒருவனைக் களபலி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு வந்த போது, "இதோ நான் இருக்கிறேன்; என்னைக் களபலியாகக் கொடுங்கள்!" என்று அரவான் முன் வந்தான். அவனைக் காட்டிலும் சிறந்த வீரன் யாரும் பாண்டவர் பக்கத்தில் இல்லாதபடியால், தானாக முன் வந்த அரவானையே பலி கொடுக்க வேண்டியதாயிற்று.

தன்னுடைய கட்சியின் வெற்றிக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த வீர அரவானின் கதை தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. துரோபதை அம்மனுக்குக் கோயில் கட்டிய இடங்களிலெல்லாம் பக்கத்தில் அரவானுக்கும் கோயில் கட்டி திருவிழா நடத்தினார்கள்.
தான் வெற்றிபெற தன்மகனையே பலிகொடுப்பதா? அப்படிப்பட்ட வெற்றிதேவையா? வான் பெற்று வட்ட நிலவை இழந்தால் ஏது பயன்.
அர்ச்சுணனை கெடுத்து கீதை என்ற பெயரில் உபதேசம் செய்த அந்த மாயக்கண்ணனை என்னவென்று சொல்வது.

Saturday, June 24, 2006

கரிகாலன் செய்தது குற்றமே

ஆதித்த கரிகாலன் கூறுகிறான்,
"இப்படி நான் தீர்மானித்திருந்த நிலையில், ஒற்றைக் குதிரையின் குளம்படி அந்தச் சோலைக்குள்ளே போயிருப்பதைக் கண்டதும் அளவிலாத வியப்பும் ஆத்திரமும் கொண்டேன். மேலும் சென்று பார்த்தபோது, அடர்ந்த மரங்களின் மறைவில் குதிரை கட்டியிருப்பதைக் கண்டேன். எனவே தப்பி வந்தவன் அந்தக் குடிசை வீடுகளில் ஒன்றில்தான் இருக்க வேண்டும். நந்தினியின் வீட்டுக்குச் சென்று பலகணி வழியாகப் பார்த்தேன். நண்பா! அங்கே நான் கண்ட காட்சி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் என் நெஞ்சில் தீட்டியது போலப் பதிந்திருக்கிறது. ஒரு பழைய கயிற்றுக் கட்டிலில் வீரபாண்டியன் படுத்துக் கிடந்தான். நந்தினி அவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். அவள் முகம் முன் எப்போதுமில்லாத காந்தியுடன் ஜொலித்தது. அவள் கண்களில் இரண்டு துளி கண்ணீர் ததும்பி நின்றது. என்னை மீறி வந்த ஆத்திரத்துடன் கதவைப் படார் என்று உதைத்துத் திறந்து கொண்டு உள்ளே போனேன். காயங்களைக் கட்டிக் கொண்டிருந்த நந்தினி என்னைக் கண்டதும் அதை நிறுத்தி விட்டு முன்னால் வந்தாள். சாஷ்டாங்கமாக என்னை நமஸ்கரித்து எழுந்தாள். கை கூப்பிய வண்ணம், 'ஐயா! நீங்கள் என் பேரில் ஒருநாள் வைத்திருந்த அன்பின் பேரில் ஆணையிட்டு வேண்டுகிறேன். இவரை ஒன்றும் செய்யாதீர்கள்! படுகாயப்பட்டுக் கிடக்கும் இவரை உங்கள் கையால் கொல்ல வேண்டாம்!' என்றாள்.

நான் தட்டுத் தடுமாறி, 'உனக்கும் இந்த மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவன் உயிரைக் காப்பாற்றும்படிக் கேட்கிறாய்?' என்றேன்.

'இவர் என் காதலர்; இவர் என் தெய்வம்; இவர் என்னை மணந்து கொள்ளச் சம்மதித்திருக்கும் தயாளன்!' என்றாள் நந்தினி.

"காயம் பட்டிருந்த வீரபாண்டியனைப் பார்த்துக் கொஞ்சம் உண்டாகியிருந்த இரக்கமும் என்னிடமிருந்து அகன்று விட்டது. இந்தப் பாதகன் சண்டாளன், - எப்படி என்னைப் பழி வாங்கி விட்டான்! என் இராஜ்யத்தையே கைப்பற்றியிருந்தாலும் பாதகம் இல்லை; என் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பெண்ணரசியையல்லவா அபகரித்து விட்டான்? இவனிடம் எப்படி இரக்கம் காட்ட முடியும்? முடியவே முடியாது!

"நந்தினியை உதைத்துத் தள்ளி விட்டு அவளைத் தாண்டிக் கொண்டு சென்று வாளின் ஒரே வீச்சில் வீரபாண்டியனுடைய தலையை வெட்டி வீழ்த்தினேன். " என்றான் ஆதித்த கரிகாலன்.
இவனது கோழைத்தனமான , வெட்கப்படவேண்டிய செயல் உடம்பெல்லாம் காயத்துடன் நொந்துபோனவனை நோகடித்து சாகடித்த சண்டாளன் தான் இச்சோழன் .
பொன்னியின் செல்வனிலிருந்து

Thursday, June 01, 2006

ஏழையென் குரல் அம்பலமேறுமா?

கரூர் , திருப்பூர் களில் ஏற்பட்ட சாயகழிவு மற்றும் திருச்சிராப்பள்ளி அதற்கு மேற்கு பக்கமுள்ள ஊர்களின் கழிவு நீர்கள் காவிரியில் கலப்பதால் குடிநீரின் சுவை குன்றி விட்டது. இந்த நிலை நீடித்தால் அனைவரும் மினரல் தண்ணீர் தான் குடிக்க வேண்டிய நிலை ஏற்படும்

இதற்கொரு திட்டங்களை போட்டு இக்கழிவு தண்ணீரை கடலில் சேர்ப்பதற்கு அரசு செய்தால் நன்றாக இருக்கும்.


கரூரில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் காவிரியின் உள்பக்கமே அடியில் புதைத்து அந்த அந்த இடத்து கழிவு நீர்களையும் இணைத்து கடலில் கொண்டு செல்லலாமா?


எனது சொல் அம்பலமேறுமா?

Tuesday, May 30, 2006

விம்பசார கதை

இந்தப் பெயர்கொண்ட பௌத்தநூல் ஒன்றிருந்ததென்பது நீலகேசி உரையினால் (190-ஆவது பாட்டுரை) அறியப்படும். நீலகேசி உரையாசிரியர் விம்பசார கதையிலிருந்து நான்கு அடிகளை மேற்கோள் காட்டி, ‘இது விம்பசார கதை என்னும் காவியம்; பௌத்தருடைய நூல்; அதன்கட் கண்டு கொள்க’ என்று எழுதியிருக்கின்றார். சிவஞான சித்தியார் என்னும் நூலுக்கு உரையெழுதிய ஞானப்பிரகாசர் (பர : சௌத்தி : மறுதலை. 5-ஆம் செய்யுளுரை) நீலகேசி உரையாசிரியர் மேற்கோள் காட்டிய அதே நான்கடிகளை மேற்கோள் காட்டி, விம்பசார கதையைப்பற்றி அவர் எழுதியவற்றை அவ்வாறே எழுதியிருக்கிறார்.


விம்பசார கதை என்னும் இந்தக் காப்பியம் எத்தனைச் செய்யுள்களையுடையது, எத்தனை அதிகாரங்களையுடையது, இதனை இயற்றியவர் யாவர் என்பதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், இக்காப்பியத்தின் பெயரைக் கொண்டு, புத்தர் காலத்தில் இருந்தவனும், அவருக்குப் பல விதத்திலும் தொண்டுசெய்து அவரை ஆதரித்துவந்தவனுமான விம்பசாரன் என்னும் அரசனது வரலாற்றினைக் கூறுவது இக்காப்பியம் என்று கருதக் கிடக்கின்றது. விம்பசாரனது வரலாற்றுச் சுருக்கம் இதுவாகும்.


விம்பசாரன் அல்லது பிம்பசாரன் என்னும் அரசன் இராசகிருகம் என்னும் நகரைத் தலைநகராகக் கொண்ட மகத நாட்டை (கி. மு. 540 முதல் 490 வரையில்) அரசாண்டு வந்தான். அக்கால்தில் ஒருநாள், இல்லற வாழ்க்கையைத் துறந்து, துன்பத்தை நீக்கும் வழியைக் காண்பதற்காகச் செல்லும் சித்தார்த்தரை அரன்மனையில் இருந்தபடியே வீதியில் கண்ட விம்பசாரன், அவரை அழைத்துத் தன்னிடம் தங்கியிருக்கும்படி வேண்டினான். சித்தார்த்தர், தாம் செல்லும் நோக்கத்தைத் தெரிவிக்க, அவன் உமது நோக்கம் நிறைவேறிய பிறகு என்னிடம் வரவேண்டும் என்று இரந்து வேண்டினான். சித்தார்த்தர் அதற்கு உடன்பட்டு, அவனிடம் விடைபெற்றுச் சென்றார். பின்னர், சித்தார்த்தர் புத்தரான பிறகு, விம்பசாரனுக்குத் தாம் வாக்களித்ததை நினைத்து, தமது சீடர்களுடன் இராசகிருகத்தின் அருகில் உள்ள சுபதித்த சேதியத்தில் வந்து தங்கினார். இதனையறிந்த அரசன் தனது சுற்றத்தாருடன் சென்று புத்தரை வணங்க, அவர் அவர்களுக்கு உபதேசம் செய்தார். அன்று முதல் அரசன் பௌத்த மதத்தை மேற்கொண்டான். அடுத்த நாள் அரசன் புத்தரையும் அவரது சீடர்களையும் அரண்மனைக்கழைத்து அவர்களுக்கு விருந்தளித்த பின்னர், அவர்கள் தங்குவதற்கு ‘வெளுவனம்’ என்னும் தோட்டத்தைப் புத்தருக்குத் தானமாகக் கொடுத்தான். அன்றியும், அவன் இறக்கும்வரையில் புத்தருக்கும் அவரது சங்கத்தாருக்கும் பற்பல உதவிகளையும் தொண்டுகளையும் செய்துவந்தான்.


இந்த அரசனுக்கு அஜாத சத்துரு என்னும் மகன் ஒருவன் உண்டு. இப்பிள்ளை பிறக்கும்போதே, இவனால் அரசனுக்கு மரணம் நேரிடும் என்று நிமித்திகர் கூறினர்.


புத்தருக்கு மைத்துனன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தேவதத்தன் என்பது. அவன் புத்தரது தாய் வழி மாமனது மகன். இந்தத் தேவதத்தன், புத்தர் உலகத்தாரால் போற்றிப் புகழப்படுவதைக் கண்டு பொறாமை கொண்டான். பௌத்த சங்கத்தின் தலைவராக வீற்றிருக்கும் புத்தரை நீக்கிவிட்டு, அவர் இடத்தில் தான் அமர்ந்து பெருமையடைய அவாக்கொண்டான். ஆனால், புத்தரும், விம்பசார அரசனும் உயிரோடுள்ளவரையில் தனது விருப்பம் நிறைவேறாதெனக் கண்டு, அவர்களைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான்.


தேவதத்தன் சில சித்திகள் கைவரப்பெற்றவனாகலின், அவன் அரசன் மகன் அஜாத சத்துருவிடம் சென்று, அவன் அஞ்சும்படி சில சித்திகளைச் செய்து, அவனைத் தன்வசப்படுத்தி, அரசனைக் கொன்று அரசைக் கைப்பற்றிக்கொள்ளுமாறும், புத்தரைக் கொன்று பௌத்த சங்கத் தலைமைப் பதவியைத் தனக்களிக்குமாறும் அவனுக்குக் கூறினான். இவனது சித்திகளைக் கண்டு இவனிடம் அச்சமும் மதிப்புங் கொண்ட அரசகுமாரன் இவன் கற்பித்த தீச்செயல்களைச் செய்ய உடன்பட்டான்.


தேவதத்தன், அரசகுமாரன் உதவியால் சில வில்வீரர்களை ஆங்காங்கேயிருக்கச் செய்து, புத்தர் பாதைவழியே செல்லும்போது அவரை அம்பெய்து கொல்லுமாறு ஏவினான். புத்தர் வீதிவழியே சென்றபோது, வில்வீரர்கள் அவர்மேல் அம்பெய்ய முடியாதவர்களாகி விறைத்து நின்றனர். பின்னர், அவர்கள் புத்தரிடம் வந்து அவரிடம் உபதேசம் பெற்றுச் சென்றனர். தனது நோக்கம் நிறைவேறாமற் போனதைக் கண்ட தேவதத்தன், தானே புத்தரைக் கொல்ல முடிவுசெய்து, அவர் பாதைவழியே செல்லும்போது பெரும் பாறைகளை மலைமீதிருந்து உருட்டினான். அவை அவருக்குப் பெரிய ஊறு செய்யவில்லையாயினும், காலில் சிறிது காயத்தையுண்டாக்கின. இதனையறிந்த அவரது சீடர்கள் அவரை வெளியே செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். புத்தர், ‘ததாகதருடைய உயிரைப் போக்க ஒருவராலும் ஆகாது’ என்று சொல்லி, தம் வழக்கம்போல் வெளியே சென்றுவந்தார். பின்னர், தேவதத்தன் அரச குமாரன் உதவியால், ‘நளாகிரி’ என்றும், ‘தனபாலன்’ என்றும் பெயருள்ள மதம்பிடித்த யானையைக் கள்ளூட்டி வெறிகொள்ளச் செய்து, புத்தர் வீதிவழியே செல்லும் போது அவரைக் கொல்ல அதை ஏவினான். அவ்யானை புத்தரைக் கண்டபோது மதமும் வெறியும் தணியப்பெற்று அவரை வணங்கியது.


இவ்வாறு, தேவதத்தன் புத்தரைக் கொல்லச் சூழ்ச்சி செய்திருக்க, அஜாத சத்துரு அரசனைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான். இதனையறிந்த அரசன் தன் மகனுக்கு அரசாட்சியைக் கொடுத்துவிட்டுத் தான் அப்பதவியினின்றும் விலகிக்கொண்டான். ஆயினும், தேவதத்தன் அரசகுமாரனிடம் சென்று, அரசனைக் கொல்லும்படி வற்புறுத்தினான். அதனைக் கேட்டு, அஜாத சத்துரு அரசனைச் சிறைப்படுத்தி, காற்றோட்டமில்லாத ‘பொதியறை’யில் அடைத்து, அரசியைத் தவிர ஒருவரும் அங்குச் செல்லக்கூடாதென்றும், ஒருவரும் அவனுக்கு உணவு கொடுக்கக்கூடாதென்றும் கட்டளையிட்டான். இவ்வாறு சிறைப்பட்ட விம்பசார அரசனுக்கு அவனது மனைவி அவனைக் காணச் செல்லும்போதெல்லாம் தனது உடையில் உணவை மறைத்துக்கொண்டுபோய்க் கொடுத்துவந்தாள். இது கண்டறியப்பட்டபின், தனது தலையணியில் சிறிது உணவை மறைத்துக் கொண்டுபோனாள். இதுவுங் கண்டறியப்பட்டபோது, இந்த அரசி நீராடித் தன் உடம்பில் ‘சாதுர் மதுரம்’ என்னும் நால்வகை இனிப்பு வகைகளைப் பூசிக்கொண்டு அரசனிடம் சென்றாள். அரசன் அவள் உடம்பில் பூசப்பட்ட இனிப்பை நக்கி உண்டு உயிர் வாழ்ந்தான். இதுவும் கண்டுபிடிக்கப்பட்டு, அரசி விம்பசாரனைப் பார்க்கக்கூடாதென்று தடுக்கப்பட்டது. விம்பசாரன் மனம் கவலாமல் பொதியரையாகிய அச்சிறையில் உலாவிக்கொண்டிருந்தான். இதனையறிந்த அஜாத சத்துரு சில மயிர்வினைஞரை அனுப்பி, விம்பசாரனுடைய பாதத்தைக் கத்தியால் கீறியறுத்து, உப்பையும் புளித்த காடியையும் இட்டுக் கட்டுமாறு கூறினான். இக்கொடுஞ் செயலைச் செய்ய மனமற்றவராக இருந்தும், அவ்வூழியர் அவ்வாறே செய்தனர். இக்கொடுமைகளால் ஏற்பட்ட துன்பத்தைத் தாங்கப் பெறாமல், விம்பசாரன் சிறைச்சாலையில் உயிர்நீத்தான்.


விம்பசாரன் உயிர் துறந்த அதே நாளில், அஜாத சத்துருவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தையிடத்தில் தந்தைக்கு உண்டாகும் அன்புணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. தன்னையும் தன் தந்தை இப்படித்தானே நேசித்திருப்பான் என்று கருதி, அவன் தன் தாயிடம் சென்று இதைப்பற்றி வினாவினான். அஜாத சத்துரு பிறந்தது முதல் விம்பசார அரசன் எவ்வாறு அவனை அன்பாக நேசித்தான் என்பதனையும், எவ்வாறு கண்ணுக்குக் கண்ணாயும் உயிருக்குயிராயும் போற்றிக் காப்பாற்றினான் என்பதனையும் அவள் அவனுக்கு விளக்கிச் சொன்னாள். இவற்றையெல்லாங் கேட்ட அஜாத சத்துரு தான் தன் தந்தையாகிய விம்பசார அரசனைக் கொடுமையாய்ச் சித்திரவதை செய்து கொன்றதை நினைத்து வருந்தினான்.


இவ்வரலாற்றினைப் பொருளாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த விம்பசார கதை என்னும் காப்பியம் எனத் தோன்றுகின்றது. இது இயற்றப்பட்ட காலம் தெரியவில்லை. இந்தக் காப்பியத்தினின்று நமக்குக் கிடைத்திருப்பன நான்கு அடிகள்மட்டுமே. அவை பின் வருவன :


‘ உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி

வலம்படு மருங்குல் வடுநோ யுறாமல்

ஆன்றோன் அவ்வழித் தோன்றினன் ஆதலின்

ஈன்றோள் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள்.’


இச்செய்யுள் நடையை நோக்கும்போது, இந்தக் காப்பியம், மணிமேகலையைப் போன்றே ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டிருக்கவேண்டும் எனத் தோன்றுகின்றது.


வலையில் சுட்டது

Saturday, May 27, 2006

சுந்தரமூர்த்தி சுவாமிகள்

பொன்னார் மேனியனே! புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே !
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே?


இந்த பாடலை பாடியவர் சுந்தமூர்த்திதான் ஏன் பாடினார் ?எதற்குப் படினார்?



"
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சோழ நாட்டு ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து கொண்டிருந்தபோது ஒரு நதியைக் கடக்க வேண்டியதாயிருந்தது. நதியைத் தாண்டி அப்பால் செல்லத் தொடங்கினார். அப்போது, 'சுந்தரம்! என்னை மறந்தாயோ!' என்று ஒரு குரல் கேட்டது.

சுந்தரமூர்த்தி திடுக்கிட்டார் அது தம்மை ஆட்கொண்ட இறைவனுடைய குரல் என்பதை உணர்ந்தார். பக்கத்தில் இருந்த சீடர்களைப் பார்த்து "இங்கே சமீபத்தில் எங்கேயாவது சிவன் கோயில் இருக்கிறதா?" என்று கேட்டார்.

"
ஆம், சுவாமி! அந்தக் கொன்னை மரங்களின் மறைவில் மழபாடி கிராமத்துச் சிவன் கோயில் இருக்கிறது!" என்று சீடர்கள் சொன்னார்கள்.

உடனே சுந்தரமூர்த்தி அங்கே சென்றார்; பூத்துக் குலுங்கிய கொன்னை மரங்களின் மறைவில் ஒரு சிறிய கோவில் இருந்தது. சுந்தரமூர்த்தி அங்கே சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மனமுருகிப் பாடினார். அன்றொரு நாள் தன்னைத் தடுத்தாட்கொண்டது போல், இன்றைக்குத் தன்னைக் கூப்பிட்டு அருள்புரிந்த கருணைத் திறனை வியந்தார்.

'
சுவாமி! தங்களை நான் மறந்து விடுவேனா? என்ன கேள்வி கேட்டீர்கள்? தங்களை மறந்துவிட்டு வேறு யாரை நினைப்பேன்?' என்னும் கருத்து அமைத்து,

மேற்கண்ட பாடலைப் படினார்.

பொன்னியின் செல்வன்

தேரின் அச்சு முறிந்து இருவர் மரணம்

திருச்சிராப்பள்ளி பெரம்பலூர் அருகே தேரொட்ட திருவிழாவில் கோயில் தேர் அச்சுமுறிந்து 2 பூசாரிகள் பலியாயினர்.

தேரை வடம் பிடித்து இழுப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தேரின் முன்புறம் இரண்டு நாகப்பாம்புகள் பொதுமக்கள் முன்னிலையில் படம் எடுத்து ஆடியுள்ளது . இதைப் பார்த்த பொதுமக்களில் சிலர் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று கூறியுள்ளனர். அவர்கள் கூறியவாறே பின்னர் சிறிது நேரத்தில் தேர் அச்சு முறிந்து கவிழ்ந்தது.


Wednesday, May 24, 2006

காற்று வெளி

வலைப்பதிவர் பெயர்: என்னார்
வலைப்பூ பெயர் : அரிவானந்தம், குட்டிராஜா, ஆன்மீகம்
உர்ல் :www.ennar.blogspot.com ,www.merkondar.blogspot.com , www.aanmeekam.blogspot.com (எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: துவாகுடி (துழாய்குடி)திருச்சிராப்பள்ளி
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானேதான் கண்டு கொண்டேன் (வலைமேய்ச்சலில்)
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 29-5-05
இது எத்தனையாவது பதிவு: தெரியவில்லை
இப்பதிவின் உர்ல்: http://aanmeekam.blogspot.com/2006/05/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எனது கருத்துக்களை தங்களைப்போன்றவர்களுடன் பங்கிட
சந்தித்த அனுபவங்கள்: என்னத்தைச் சொல்ல?
பெற்ற நண்பர்கள்:சிலர்
கற்றவை: கையளவு
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:யாரைவேண்டுமானலும் ஜல்லியடித்தல் ( நானல்ல மற்றவர்கள்)
இனி செய்ய நினைப்பவை: நல்லவை
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இது வே அதிகம்

இந்த வரலாற்று சிறப்புமிக்க பதிவுக்கு(ரொம்ப ஓவரா இல்லைன்னு தான் நினைக்கிறேன்) ஆமாம்
வலைப்பதிவர்களின் ஆதரவினை நன்றியுடன் எதிர்பார்க்கிறேன்.


Friday, May 12, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 6 -

இந்த கணக்கு சரியாக இருக்குமா? எனக்குச் சொல்லுங்கள்

ராமர் பிறந்த தினம்
டாக்டர் பி.வி.வர்த்தக் என்பவரின் ஜோதிட கணக்கின்படி கி.மு.7323, டிசம்பர் 4ம் தேதி செவ்வாய் கிழமையன்று ராமபிரான் பிறந்ததாக கூறுகிறார். கி.மு.7306, நவம்பர் 29ம் தேதி வியாழக்கிழமை ராமர் காடு சென்றார். அவர் காடுசென்ற 6ம்நாள் புதன்கிழமை (டிசம்பர் 5ம் தேதி) தசரதர் இறந்தார். கி.மு.7292, நவம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ராவணன் இறந்தான். கி.மு.7292 டிசம்பர் 5ம் தேதி சனிக்கிழமையன்று ராமன் அயோத்தி வந்தார். இந்த கணக்கின்படி ராமன் 110 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என வர்த்தக் கூறுகிறார்.

Friday, May 05, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 5 -

கரிகாலன் காவிரிக்கு கரை கட்டுவித்தான் . சிற்றரசர் கலரும் அவன் ஆணையை ஏறறுக் கரை அமைத்தனர். பிரதாபருத்திரன் என்னும் மன்னன் காவிரிக்குக் கரை எடுக்க வராமல் ஆரவாரித்தான். அவனுக்கு நெற்றியிலும் ஒரு கண் இருந்ததாம்! கரிகாலன் பிரதாபருத்திரனது படத்தை எழுதி வருமாறு ஓவியனுக்குக் கட்டளையிட்டான். படம் வரையப்பட்டு வந்தது. அதில் அவனுக்கு மிகையாக நெற்றியில் இருந்த ஒரு கண்ணைக் கரிகாலன் தனது பாதத்தால் மிதித்து அழித்தான். அப்பொழுதே பிரதாபருத்திரன் நெற்றிக் கண்ணை இழந்தான். செருக்கு அழிந்த பிரதாபருத்திரன் கரிகாலன் கட்டளையை நிறைவேற்றினான்.
197
தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
தொடர வந்திலா முகரி யைப்படத்
தெழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்
றிங்க ழிக்கவே அங்க ழிந்ததும். 20
கலிங்கத்துப் பரணி
முக்கண்ணன் சிவன் கேள்விப்பட்டோம் சரி மானிடருக்கு முக்கண் இருக்குமா?

Wednesday, May 03, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 4 -

சிதம்பர ரகசியம் என்றால் என்ன?


சிதம்பர ரகசியம் என்று ஒரு பெரிய சொல் வழக்கு உள்ளது. அது சிற்சபையினுள் உள்ள சபாநாயகரின் வலப்புறம் உள்ள சிறு வாயில் உள்ளது. அதன் திரை நீக்கி ஆரத்தி காட்டப் பெறும். அதனுள் ஏதும் காணப் பெறாது. தங்கத்தாலான வில்வ இலை மாலை தொங்க விடப் பட்டு இருக்கும். மூர்த்தியின் சிலையேதும் இராது. இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதே இதன் இரகசியம் ஆகும்.


சிதம்பரத்தில் இரகசியமாய் விரியும் ஆகாச லிங்க வடிவம்....

http://www.varalaaru.com/Default.asp?articleid=28


Tuesday, May 02, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 3 -

முத்து எங்கு கிடைக்கம் கடலில் மட்டுமா? இல்லை மேக கூட்டத்திலுமா?,

இதோ வயல் காட்டில் விளையும் கரும்பிலும் முத்து கிட்டியதாம்!!!!!


மெய்யாலுமா? தெரிந்தவர்கள் கூறுமின்கள்


ஒருநாள் சடையவள்ளல் சோழனதவைக்களத்தே போந்து சிறக்கவீற்றிருந்தபோது, பெருங்குடி வணிகனொருவன், கடலிற்பட்ட அருவிலையுடைய பெருகொளிப்பருமுத்துகள் பலவற்றைக் கொணர்ந்து சோழன் திருமுன்னர் வைத்து, 'இவை முடியுடை வேந்தர்க்குத் தக்கன' என்று கூறாநிற்ப, அரசன் அவற்றைக் கண்டு மகிழ்ந்து புகழ்ந்தானாக, அதுகண்ட சடையவள்ளல் கழனிபடு வளத்தையே மேம்படுத்தேத்தி, அக்கழனிபடுமுத்தைக் போல இவை பெரியனவும் ஒள்ளியனவுமாகா' என்று சோழற்கு மாறுரைத்தனன்.

அதுகேட்ட சோழன் கழனியில் முத்துப்படுவது கேட்டறிவதன்றி யாம் கண்டறிவதில்லை என்ன, சடையவள்ளல் அது நுமக்கரிதாவதன்றி எமக்கன்று; நுமக்கு யான் அதுகாட்டுவேன் என்று, தமது கழனியிற் கமுகுபோலப் பருத்துவளர்ந்துள்ள கரும்புகளில் ஒரு சிலவற்றைக்கொணருவித்து, அவற்றுட் கோணிக் குறுகியதொரு கரும்பினை எடுத்து அதனொரு கண்ணை முறித்தனன். அதினின்று பல முத்துகள் தெறித்து வீழ்ந்து, அரசனது முடிமணியொளியினும் பேரொளி பரப்பின.

அப்போது சடையவள்ளல் தன் கழனிகளிலொன்றில் ஆயிரக்கணக்கான கரும்புகளில் ஒரு சிலவற்றானாயதொரு சிறுகட்டின்கணிருந்தவற்றில் ஒரு கோணற் சிறுகரும்பின் ஒரு கண்ணிலிருந்தன இவை என்றும், இங்ஙனமே தன்கழனிதோறும் உள்ளனவற்றையெண்ணிற் கணக்கிலவாமென்றும் அரசற்கு எடுத்துக் கூறினன். அதுகேட்டு, அரசவையிலிருந்த சான்றோரெல்லாம் 'சடையன் கழனிபடுவ கடல்படா' என்று புகழ்ந்தனர். கரும்பினின்று தெறித்த முத்துகளெல்லாம் ஒளியானும் பருமையானும், வணிகன் கொணர்ந்த கடல்படு முத்துகளையும் வென்று சிறத்தலை அரசன் கண்ணாரக்கண்டு, முகத்தான் வியந்து, அகத்தாற் சடையனது செல்வத்தில் அழுக்காறு கொண்டனன் என்ப.


http://www.tamilnation.org/literature/pmunicode/mp202.htm


Sunday, April 30, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 2 -

வரலாறு தளத்தில் திரு கலைக்கோவன் சொல்கின்றார்

//திருச்சியிலிருந்து ஐம்பத்து நான்கு கிலோமீட்டர் தொலைவில்
அமைந்துள்ளது. மேலப்பழுவூர், கீழையூர், கீழப்பழுவூர் என்ற
மூன்று சிற்றூர்களாய் சிதறியுள்ளது இப்பழுவூர் மண்டலம்,
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர்ப் பெரும்பழுவூர், அவனி
கந்தர்ப்புரம், சிறு பழுவூர் என்ற மூன்று ஊர்களின் முழுமையாய்த்
திகழ்ந்தது. இப்பழுவூரை ஆண்ட சிற்றரசர்களே பழுவேட்டரையர்கள்//

என்று 'பழுவூ 1' ல் திரு கலைக்கோவன் சொல்கின்றார்
http://www.varalaaru.com/Default.asp?articleid=116

ஆனால் பொன்னியின் செல்வனில் கல்கியவர்கள்

//உறையூருக்குப் பக்கத்தில் வட காவேரியின் வடகரையிலுள்ள
பழுவூர் அவர்களுடைய நகரம். விஜயாலய சோழன் காலத்திலிருந்து
பழுவேட்டரையர் குலம் வீரப்புகழ் பெற்றிருந்தது. ஆக்குடும்பத்தார்
சோழ மன்னர் குடும்பத்துடன் கொள்வினை கொடுப்பினை செய்து
வந்தனர். இது காரணமாகவும், அவர்களுடைய குலத்தொன்மை...//
http://www.chennainetwork.com/kalki/ps/ps1-1.html

இவ்வாறு சொல்கிறார்கள்
பழுவூர்கள் பல உண்டு உறையூருக்கு மேற்கே தென் காவேரியின்
தென்கரையிலும் மற்றும் சில பக்கங்களிலும் இருக்கலாம் .
இதில் எந்த ஆசிரியர் சொன்னது சரி

யாரவது என் ஐயம் தீர்க்க முடியுமா? இதற்கு பொற்கிழி கிடைக்காது.

Saturday, April 29, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ

தேசிகன் வலையில் தான் இதைச் சுட்டேன்

ஸ்ரீரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய புஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார்.
இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறுது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய ஸ்ரீரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பக் சொல்லிக் கொண்டுடிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருத்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.
சரி இதை ஏன் அந்த ஸ்ரீராமபிரான்
விபீஷணனிடம் அதைக் கொடுத்தான்
யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்

Saturday, April 01, 2006

சிவ காட்சி

பாரில் பக்த்தனக்கு காட்சிகொடுக்க அச்சிவன் செய்த காரியம்

'சிவபக்தியில் மேம்பட்டவனும் மிக்க புகழ்வாய்ந்தோனும் ஆகிய காடு வெட்டி யென்னும் ஓர் தலைவன் மதுரையிற் சொக்கலிங்கப் பெருமானைப் பணிதற்குச் சென்று வையையாற்றின் வடகரையை அடைந்தான். அப்பொழுது பாண்டியன் நாற் புரத்த மதிற் கதவையும், சாத்தித்தன் முத்திரையிட்டு, அவனுடன் படையெடுக்க முயன்றான். வையையும் பெருகிவிட்டது. இந்நிலைமையில் சிவபிரானானவர் காடு வெட்டியின் அன்புக்கு இரங்கி, நள்ளிரவில் வடக்கு மதில் வாயிலை முரித்தது வந்து, ஓர் இயந்திரத்தால் அவனையாற்றின்தென்கரையில் ஏற்று வித்து, மதில் இடித்தவழியாகக் கொண்டு சென்று, இருளை வெளிதாக்கி, அவனுக்குச் சோதி விமானத்தையும், தாம் தமது ஒப்பற்ற திருவுருவத்தையும் காட்டியருள, அவனம் கண்டுபோற்றி மனமுருகி நின்றான். நின்றவன் பின் பெருமானது கட்டளையால் விடியமுன்னே மதுரையை விட்டுப்போய் விட, ஆலவாயடிகளாரும் மதிலை புதுப்பித்துத் தமது இடபவிலச்சினையிட்டுப் பாண்டியனுக்குக் கனவிலே அறிவித்தருளினார்'

உண்மையான பக்திக்கு கிடைத்த தரிசணம்

திருவிளையாற்புராணம்

Friday, March 31, 2006

திருச்சிராப்பள்ளி

உறையூரைச் சேர்ந்த சோழன் கிள்ளியின் போர் யானை, அபூர்வமான ஒன்று.

அதிகாலையில் உறையூரிலிருந்து கிளம்பிய அந்த யானை, முதலில் காஞ்சி நகருக்குச் சென்றது, அதை ஒரு காலால் மிதித்தது. (அதாவது, அந்த நாடு சோழனுக்கு உரிமையானது !)

அடுத்ததாக, நீர் அலைகள் தத்திக் குதிக்கும், குளிர்ச்சியான உஜ்ஜயினி நகருக்குச் சென்று, அதை இன்னொரு காலால் மிதித்தது.

அதன்பின்னர், கடலைக் கடந்து, இலங்கை - ஈழத்தையும் ஒரு காலால் மிதித்தது.

இப்படியாக, எல்லா நாடுகளையும் தன் காலால் மிதித்து, வெற்றி கண்டபின், உறையூர் நகருக்குத் திரும்பியது அந்த யானை !

அந்தக் காலத்தில் அரசர்கள் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்நாட்டு மன்னர்களுடன் போரிட்டு, வென்று, தங்களின் ராஜாங்கத்தை விரிவுபடுத்திக்கொள்வார்கள் - சோழன் கிள்ளி, காஞ்சி, உஜ்ஜயினி, இலங்கை ஆகிய பகுதிகளை வென்றவன். அந்தச் செய்தியை, இந்தப் பாடல் சோழனின் யானையைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது !


கச்சி ஒருகால் மிதியா, ஒருகாலால்
தத்துநீர்த் தண்உஞ்சை தான்மிதியாப் பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமே,நம்
கோழியர்கோக் கிள்ளி களிறு.

(கச்சி - காஞ்சி நகரம்,
மிதியா - மிதிக்கும்
தத்து - தத்திக் குதிக்கும்
தண் - குளிர்ச்சியான
உஞ்சை - உஜ்ஜயினி நகரம்
பிற்றை - பின்னர்
கோழியர் - உறையூரைச் சேர்ந்தவர்கள்
கோ - அரசன்
களிறு - ஆண் யானை)

Wednesday, March 29, 2006

ஜமதக்னீ முனிவர்

மதக்னீஸ்வரர் ஆலயம் உள்ள கிளாங்காடு முதலில் கீழ் வெண்காடு எனப் பெயர் பெற்றிருந்ததாம்.

‘‘கிளா’’ மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியாய் இருந்ததால் ‘‘கிளாங்காடு’’ என்றும் மாறியதாகவும் வரலாறு. ஊரின் தென்புறத்தில் அனுமன் நதியும், வடபுறத்தில் கரும்புச்சாறு நதியும் (தற்போது கருப்பாநதி) பாய்ந்தோடி வளம் சேர்க்க, இரு நதிகளுக்கும் இடையிலுள்ள சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த கோவிலுக்குள் அமிழ்த சொரூபியாய், ஆனந்தச்சித்தனாய் லிங்க வடிவுருவில் லெளகீக வாழ்வுக்கு அருள் பாலிக்கும் ஜமதக்னீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் ஜமதக்னி முனிவரும், அவரது பத்தினி ரேணுகாதேவியும் மகன் பரசுராமன் மற்றும் முனிவர்களும் வாழ்ந்து வந்தனர். வினாயகரின் அருளால் ஆயிரம் கைகள் பெற்ற கார்த்த வீரிய அர்ச்சுனன் எனும் மன்னன், ஜமதக்னி முனிவர் வாழ்ந்த காட்டுப் பகுதிக்கு வேட்டையாடவந்தான். உச்சிநேரத்தில் களைத்து உணவு கிடைக்காமல் திண்டாடிய மன்னன், ஜமதக்னி முனிவரை சந்தித்தான்.

மன்னனுக்கும் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களுக்கும் பல்சுவை உணவு அளித்தார், மாமுனிவர்.

எப்படி இது சாத்தியமானது என அரசன் கேட்க, அத்தனைக்கும் காரணம் காமதேனு என்னும் தெய்வீகப் பசுதான் என, அடுத்து வரப்போகும் ஆபத்தை உணராமல் உரைத்தார் மாமுனிவர். நாடாளும் மன்னன் மனதில் சில நச்சு யோசனைகள் தோன்ற, காமதேனுவை என்னோடு அனுப்புங்கள் என கெஞ்சியும் பிறகு மிஞ்சியும் பேசினான்.

முனிவர் ஜமதக்னியோ, ‘‘அது தெய்வீகப்பசு... ரிஷிகளிடம் மட்டுமே வாழும். அதை உன்னோடு அனுப்பவும் முடியாது.’’ என்று மறுத்தார்.

அறிவிழந்த மன்னன் காமதேனுவைக் கைப்பற்ற தன் படைகளுக்குக் கட்டளையிட, மாமுனிவர் காமதேனுவுக்கு கண் ஜாடை காட்டினார் அவ்வளவுதான் தனது கொம்புகளை சுழட்டி சிலுப்பிய வேகத்தில் மன்னனின் படைகளுக்கு எதிராக மாபெரும் படையொன்று உருவெடுத்து மன்னனின் படைகளுக்கு மரணம் கொடுத்தபின் மறைந்து போயிற்று.

ஆயிரங்கைகள் கொண்டு தடுத்தும் அவமானம் நிகழ்ந்துவிட்டதே என வருந்திய மன்னன் வஞ்சம் வைத்தான்.

கிளா மரங்கள் அடர்ந்த சோலைக்குள் ஜமத்னி முனிவர் சிவலிங்கத்தின் முன் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். எதிர்பார்த்த சூழ்நிலை இயற்கையாய் கிடைக்க, வஞ்சம் வைத்த மன்னன் மாமுனியை சிரச்சேதம் செய்துவிட்டான். அப்போது அங்கு வந்த ரிஷிபத்தினியை இருபத்தொரு முறை வாளால் குத்திவிட்டு விரைந்தான்.

மகன் பரசுராமன் வரும்வரை தன் உயிரைத் தக்க வைக்குமாறு தெய்வத்தை வேண்டினார் ரிஷி பத்தினி. அதற்குள் பரிதவித்து வந்து சேர்ந்தான் பரசுராமன். நடந்ததையெல்லாம் மகனிடம் சொன்ன பின் உயிர் நீத்தார் ரேணுகாதேவி.

ஈமச்சடங்குகள் முடிந்த பதினாறாம் நாள் ‘‘காளியாக’’ அவதாரம் எடுத்த ரேணுகா தேவி, மகன் முன்தோன்றி அவனுக்கு மழு (கோடரி) ஆயுதம் தந்து மறைந்தாள். இருபத்தோரு தலைமுறைக்கு சத்திரிய வம்சத்தை கருவறுக்க சபதம் செய்தான் பரசுராமன். அதை நிறைவேற்றியபின், தன் தந்தை வழிபட்ட சிவமூர்த்திக்கு ஓர் ஆலயம் அமைத்தான்.

இப்போதும் இந்த சிவாலயத்தின் ஈசானிய மூலையில், ரேணுகாதேவி தனியாக வீற்றிருக்கும் சன்னதி இருக்கிறது. கங்கையைத் திரட்டி வந்து ஜமதக்னி முனிவரின் பூஜைக்கு உதவியதால் ‘‘கங்கைக்கு வாய்த்த அம்மன்’’ என்ற காரணப் பெயரும் இப்போது நிலவுகிறது.

ஜமதக்னி முனிவர் பூஜித்த சிவலிங்கம், கால நிகழ்ச்சிகளில் கட்டுண்டு, புதர்மண்டி, பூமிக்குள் அமிழ்ந்துவிட்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு தென்காசி காசி விசுவநாதர் ஆலயத்தைக் கட்டிய மன்னன் பராக்கிரம பாண்டியன் இவ்வழியாக குதிரையில் சென்றபொழுது கால் இடறி கீழே விழுந்த குதிரை எழுந்திருக்க மறுத்தது. அப்போது அசரீரியின் வாக்கு மன்னனுக்கு பூமியைத் தோண்டுமாறு கட்டளையிட, உடனே தன் படைகளைப் பணித்தான் மன்னன் பராக்கிரமன். அப்படித் தோண்டிய போது கிடைத்தது தான் ஜமதக்னி முனிவரால் பூஜிக்கப்பட்ட இந்த சிவலிங்கம். அதன் பலனாகவே இறைவனுக்கும் ஜமதக்னீசுவரர் எனவும் பெயரிட்டனர்.

ஜமதக்னீஸ்வரராய் வீற்றிருக்கும் இறைவன் கிழக்கு நோக்கியும், அதையொட்டி ஊரைபார்த்து தெற்கு நோக்கி அருள் பாலிக்கும் நல்ல மங்கை அம்பாளையும் சுற்றுவட்டார மக்கள் வணங்கி பல பேறுகளைப் பெற்றுள்ளனர்.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் படும் முன்பு சில காலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த இந்தக் கோவிலை கேரள தேவசம் போர்டு நன்கு கவனித்து வந்தது. இதற்கு ஆதாரமாய் வெளிச்சுற்று பிராகாரத்தில் தனது சங்கு முத்திரையை பதித்துள்ளது அப்போதைய திருவிதாங்கூர் தேவசம் போர்டு.

தற்போது கோயிலின் உட்புறமுள்ள தீர்த்தக்கிணறு தூர்ந்து, பிராகாரங்கள் மற்றும் உள்வெளிகள் தக்க பராமரிப்பின்றி கொஞ்சம் தடுமாறிப்போயுள்ளது. பக்தர்கள் இந்த அரிய கோயிலை ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அதற்கும் அவன் அருள்தானே வேண்டும்!

நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிளாங்காடு என்னும் கிராமத்திலுள்ளது இக் கோவில்.
குமுதம்
_ செந்தில் குமார

Thursday, March 23, 2006

எம்.எம். மாரியப்பா

இசைத் தென்றல் எம்.எம். மாரியப்பா

திருச்சி சின்னக்கம்மாளத்தெருவில் 11-4-1916 அன்று பாடகரான வை.முருகானந்தம் ஆச்சாரிக்கும் திருமதி. சின்னப்பொண்ணு அம்மாளுக்கும் ஒரே புதல்வராகப் பிறந்தவர் எம்.எம். மாரியப்பா அவர்கள். பள்ளியில் கல்வி கற்காமல் சுயமுயற்சியாலேயே எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். இளம் வயதிலேயே தனது தந்தையிடம் பக்திப் பாடல்கள், தேசியப்புரட்சிப் பாடல்கள், தேசத்தலைவர்களின் சுதந்திரப் போராட்ட கால வரலாற்றுப் பாடல்கள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு தனது திறமையின் மூலம் கலைத்துறையில் அடி எடுத்து வைத்தார். முக்கியமாக இவரது நாடகப் பணிக்கு திருச்சிராப்பள்ளி டி.எஸ். மாணிக்கம் பிள்ளை வழிகாட்டியாக இருந்தார்.

பால பாரத நாடக சபாவில் முதலில் சேர்ந்து நடித்த இவர் பின்னர் மதுரை ஸ்ரீராஜராஜேஸ்வரி நாடக சபா, மூவேந்தர் நாடகசபா, ஓம் சக்திவேல் நாடகசா, ராணிதுரை நாடகசபா, எம்.எம். மாரியப்பா இசை நாடகக் கலைக்குழு எனப் பல நாடகக் கலைக்குழுக்களை நிறுவியும் தாமே சொந்த மாகப் பல நாடகங்கள எழுதியும், அந்நாடகங்களில் நடித்தும். பாடியும் தம் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

சங்கரதாஸ் சுவாமிகளின் வள்ளித் திருமணம் கோபாலகிருஷ்ண பாரதியின் பரமபக்த நந்தனார் மற்றும் பாமா விஜயம், பவளக்கொடி, தூக்குத்தூக்கி போன்ற இசை நாடகங்களிலும், விரோதி, அசோகனின் காதலி போன்ற சரித்திர , சமூக நாடகங்களிலும் நடித்துள்ளார். இன்பவீடு, விரோதி, நாட்டுக்கு நல்லது போன்ற பல நாடகங்களை இவர் எழுதியும் உள்ளார். அல்லி விஜயம், ஜோதி அருணகிரிநாதர், ராஜா கோவிநாத் போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் பாடியும் நடித்தும்உள்ளார்.

1942 ஆம் வருடம் கோவை ஜுபிடர் பிக்ஸரில் மாதச் சம்பளத்திற்கு சேர்ந்துதிரைப்பட உலகின் முதல் பின்னணிப்பாடகராக அறிமுகமானார். 1947 இல் தாயரிக்கப்பட்டஅமரர் எம்.ஜி.ஆரின் முதல் படமான ராஜகுமாரி திரைப்படத்தில் அவருக்காக முதன் முதல் பல பாடல்களைப் பின்னணி பாடியுள்ளார். நடிகர் திலிகம் சிவாஜி கணேசனுக்கும் பின்னணிப் படியுள்ளளார். கொலம்பியா, எச்.எம்.வி. மாஸ்டர் போன்ற கிராமபோன் இசைத்தட்டுக் கம்பெனிகளுக்காக இவர் ஸ்பெஷல் பாடல்களையும் பாடி இரைத்தட்டுகளாக அவைகள் வந்துள்ளன.

இவரது தமிழ்பபணியைப் பாராட்டித் தந்தைப் பொரியார் 1945இல் தமிழ் இசை தென்றல் என்ற பட்டத்தினையும், சென்னை கவர்னர் சர்.ஆர்.சி அவர்கள் தங்கப்பதக்கமும், பாராட்டும், 1948 இல் திருவாரூர் முருகன் அடியார்கள் சார்பாக இசைமணி பட்டமும், திருச்சி ஐந்தொழிலாளர் சங்கம சார்பாக 1959 ல் கேடயமும் பாராட்டும், திருச்சி நற்றமிழ் சொற்பயிற்சி மன்றத்தினர் 1960இல் இயல் இசைத் தென்றல் பட்டமும் தந்துள்ளனர்.

தமிழ் அறிஞர்கள் பலரின் பாராட்டையும் மதிப்பையும் பெற்ற இவர், 1977இல் தமிழ் நாடு இயல் இசை நாடகமன்றம் சார்பில் கலைமாமணி பட்டமும் பொற்கிழியும் பெற்றுச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ்த் திரைப்பட உலகில் தமக்கென ஒரு தனிப் பாணியை வகுத்துக் கலை உலகிழல் பெரும் புகழ் எய்திய பாடகர், நடிகர் எம்.எம்.மாரியப்பா தம் 66 ஆம் வயதில் 14-1-1982 அன்று சமயபுரத்தில் அமரரானார். 1984இல் தமிழ் நாடு இயல் இசை நாக மன்றத்தில் இவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.

முருகானந்தத்தின் நடந்தாய் வாழியிலிருந்து

Tuesday, March 21, 2006

எம்.கே. பாகவதர்

ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்

திருச்சி பாலக்கரையில் 01-03-1910 அன்று பிறந்தவர் தியாகராஜர். படிப்பில் ஆர்வமற்ற இவர் 10 வயது முதலே விளையாட்டாக பஜனைப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். இவரது குரல் வளம், இனிமை, இசைஞானம் ஆகியவற்றைக் கண்ட இவரது பெற்றோர்கள் பொன்னுசாமி அய்யங்கார் என்பவரிடம் சங்கீதம் கற்க அனுப்பிவைத்தனர். (பாகவதர் ஆசாரி ஜாதியைச் சேர்ந்தவர்) பாடுவதோடு நடிக்கவும் ஆர்வம் கொண்ட இவர் தேவர்மன்றத்தில் பவளக்கொடி, வள்ளித்திருமணம் போன்ற நாடகங்கறில் முக்கிய வேடமேற்றுப் பாடி நடித்துள்ளார். வள்ளித்திருமணம் நடித்ததின் மூலம் தியாகராஜர், தியாகராஜ பாகவதர் ஆனார். தொடர்ந்து அவர் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. செட்டிநாடு வள்ளல் லேனா செட்டியார் பாகவதரை ஒப்பந்தம் செய்து தமிழ் நாடு முழுக்க நாடகங்களை நடத்தினார்.

அக்காலத்திய புகழ்மிக்க தாரகை எஸ்.டி.சுப்புலெட்சுமியுடன் சேர்ந்து இவர் நடித்த நாடகங்கள் பரவலான வரவேற்பைப் பெற்றதோடு திரைப்படத்துறையில் நுழையவும் வாய்ப்பேற்படுத்தி தந்தது. தியாகராஜர் நடித்த முதல் படம் பவளக்கொடி, திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் அபார வெற்றியைப் பெற்றுத் தந்தது புகழ்க் கொடி நாட்டினார். நவீன சாரங்கதாரா, சத்தியசீலா, அம்பிகாபதி, அசோக்குமார், சிந்தாமணி, ஹரிதாஸ் போன்று பல படங்கள் நூறுவாரம் ; இருநூறு வாரம் என்று ஓடி மக்களை வியப்படைய வைத்தன. ஹரிதாஸ் மூன்று தீபாவளியைக் கண்ட படம் என்று சாதனை படைத்தது. ஏழிசை மன்னர், செந்தமிழ் நடிகர் என்ற பட்டங்களை பெற்றவர். திரைப்படத்துறையில் புகழின் உச்சத்தில் இருந்தபோது இலட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இவரும் குற்றவாளியாக்கப்ட்டார்.

விடுதலை பெற்று வந்தும் இவர் நடித்தார் என்றாலும் முன்பு இருந்த வரவேற்பை இவரது படங்கள் பெறவில்லை. ஒரு மகாராஜாவைப் போல வாழ்ந்த இந்த இசைமேதை பின்னாளில் கண்பார்வை இழந்து சமயபுரத்தில் இருந்த காலத்தைக் கண்டு உருகாத கண்கள் இல்லை. இவருடைய மேதைமையைப் பெருமைப்படுத்தும் விதமாக அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அரசு கலையரங்கிற்கு எம்.கே.தியாகராஜ பாகவதர் கலையரங்கம் என பெயர் சூட்டினார்.

இவர் வீட்டில் இருந்தால் சாக்கடையில் அத்தர் ,ஜவ்வாது வாசணை வருமாம். எந்த பெண்ணாக இருந்தாலும் இவரது வசீகர பார்வையில் விழுந்து விடுவார்களாம் அழகான கண் எடுப்பான தோற்றம். மன்மதன் என்றால் இவர் தானாம். இவரது குரல் இனிமை, தங்கவண்ணத்தில் ஆடை, நெற்றியில் ஒரு பொட்டு. இத்தியாதியுடன் இருப்பார் இவரை பார்த ஆடவர்களே ஆசைபடுவார்களாம் சொல்லக்கேள்வி. இவரது உறவினர்கள் தான் எனது கிராமத்துக்கார்கள் சரஸ்வதி சபதம் என்ற கதையை எழுதியவர்கள் .


Monday, March 20, 2006

பி. இரத்தினவேலு தேவர்

திருச்சிராப்பள்ளி நகர வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியோர்கள் பலரில் நகராட்சித் தலைவராயிருந்த பி. இரத்தினவேல் தேவர் அவர்கள் முதன்மையானவர். 1883 ஆம் ஆண்டு பிராச்சிலையில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்தவர். எஸ்.பி.ஜி. பள்ளியிலும் பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

பொது வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேவர் 1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி வேட்பாளராகத் திருச்சிராப்பள்ளி நகரமன்ற உறுப்பினருக்குப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். பின்னர் நகரமன்றத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந் தெடுக் கப்பட்டார். 1924இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924முதல் 1946 வரை 4 முறை நகராட்சித் தலைவர் பொறுப்பேற்று நகர வளர்ச்சிக்கு அரும்பணியாற்றினார். 1946இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவர், பிற்காலத்தில் நீதிக்கட்சியோடு கருத்து வேறுபாடு கொண்டார். திலகரும், காந்தியாரும் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். காந்தியடிகளின் போதனைகளை மக்களிடம் பரப்பினார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அதனால் பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். ராஜாஜி மன்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் அன்புக்குப் பாத்திரராகவும் இருந்தார்.

இரத்தினவேல் தேவர், நகரமன்றத் தலைவராகப் பணியாற்றியபோது கம்பரசம் பேட்டையில் இருந்து நீரேற்று நிலையத்தை நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்பத்தி தனது சொந்த செலவில் விரிவாக்கம் செய்தார். அன்றைய மாகாண அரசின் நிதி இலாகா, தேவரின் செயலைக் கண்டித்து இவருக்குத் தாக்கீது அனுப்பியது. இதனை எதிர்த்து இலண்டன் பாராளுமன்றத்திற்குத் தேவர் முறையீடு செய்தார் லண்டன் பாராளுமன்றம் இவரது முயற்சியைப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியது. பத்திரிக்கைகளின் மூலம் இச்செய்தியினை அறிந்த மகாத்மாகாந்தி அடிகள் தேவரைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். திருச்சிராப்பள்ளிக்கு வந்த ஜவஹர்லால் நேரு இவரது இல்லம் வந்து உணவருந்திப் பாராட்டினார்.

திருச்சிராப்பள்ளி நகரக் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவராகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும், தேசியக் கல்லூரி நிரவாகக் குழுத் தலைவராகவும், இலங்கை தமிழர் யூனியன் கிரிக்கெட்குழுத் தலைவராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். இரத்தினவேல் தேவர் சிறந்த கிரிக்கெட் வீரர். திருச்சிராப்பள்ளியில் கிரிக்கெட் குழு அக்காலத்திலேயே இலங்கை சென்று பெரும் புகழ்பெற்றது. நகரின் குடிநீர்ப் பிரச்சினையைப் பெரிதும் தீர்த்தவர் தேவர்.10-6-48 இவர் இயற்கை எய்தினார்.

இவரது பெயரில் தான் தேவர்ஹால் உள்ளது அந்த இடம் தேவருக்குச் சொந்தமாகும்

மாநகராட்சிஅலுவலகமம் உள்ள இடமும் இவருக்குச் சொந்தமானது

சிந்தாமனி விற்பனைக்கூடமும் இவருக்குச் சொந்தமானது

இலங்கை அமைச்சர் தொண்மைமான் இவருக்கு உறவினராவார்

பசும்பொன் தேவர் திருமகனாரும் இவரது இல்லத்தில் கொஞ்சநாள் இருந்தார்

காந்தியடிகள் தன் கையால் நூற்ற சேலை ஒன்றை இவருக்களித்தார்

இவருக்கு சிலை வைக்கத்தான் எந்த அரசும் ஒப்புதல் வழங்கவில்லை

இதுதான் கொடுமையிலும் கொடுமை அவர் திருச்சி நகருக்களித்த சொத்துகள் அதிகம் அப்படிப் பட்டவருக்கு சிலை வைக்க அரசு தடுமாறுவது தான் காரணம் தெரியாத ஒன்று