Tuesday, May 30, 2006

விம்பசார கதை

இந்தப் பெயர்கொண்ட பௌத்தநூல் ஒன்றிருந்ததென்பது நீலகேசி உரையினால் (190-ஆவது பாட்டுரை) அறியப்படும். நீலகேசி உரையாசிரியர் விம்பசார கதையிலிருந்து நான்கு அடிகளை மேற்கோள் காட்டி, ‘இது விம்பசார கதை என்னும் காவியம்; பௌத்தருடைய நூல்; அதன்கட் கண்டு கொள்க’ என்று எழுதியிருக்கின்றார். சிவஞான சித்தியார் என்னும் நூலுக்கு உரையெழுதிய ஞானப்பிரகாசர் (பர : சௌத்தி : மறுதலை. 5-ஆம் செய்யுளுரை) நீலகேசி உரையாசிரியர் மேற்கோள் காட்டிய அதே நான்கடிகளை மேற்கோள் காட்டி, விம்பசார கதையைப்பற்றி அவர் எழுதியவற்றை அவ்வாறே எழுதியிருக்கிறார்.


விம்பசார கதை என்னும் இந்தக் காப்பியம் எத்தனைச் செய்யுள்களையுடையது, எத்தனை அதிகாரங்களையுடையது, இதனை இயற்றியவர் யாவர் என்பதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், இக்காப்பியத்தின் பெயரைக் கொண்டு, புத்தர் காலத்தில் இருந்தவனும், அவருக்குப் பல விதத்திலும் தொண்டுசெய்து அவரை ஆதரித்துவந்தவனுமான விம்பசாரன் என்னும் அரசனது வரலாற்றினைக் கூறுவது இக்காப்பியம் என்று கருதக் கிடக்கின்றது. விம்பசாரனது வரலாற்றுச் சுருக்கம் இதுவாகும்.


விம்பசாரன் அல்லது பிம்பசாரன் என்னும் அரசன் இராசகிருகம் என்னும் நகரைத் தலைநகராகக் கொண்ட மகத நாட்டை (கி. மு. 540 முதல் 490 வரையில்) அரசாண்டு வந்தான். அக்கால்தில் ஒருநாள், இல்லற வாழ்க்கையைத் துறந்து, துன்பத்தை நீக்கும் வழியைக் காண்பதற்காகச் செல்லும் சித்தார்த்தரை அரன்மனையில் இருந்தபடியே வீதியில் கண்ட விம்பசாரன், அவரை அழைத்துத் தன்னிடம் தங்கியிருக்கும்படி வேண்டினான். சித்தார்த்தர், தாம் செல்லும் நோக்கத்தைத் தெரிவிக்க, அவன் உமது நோக்கம் நிறைவேறிய பிறகு என்னிடம் வரவேண்டும் என்று இரந்து வேண்டினான். சித்தார்த்தர் அதற்கு உடன்பட்டு, அவனிடம் விடைபெற்றுச் சென்றார். பின்னர், சித்தார்த்தர் புத்தரான பிறகு, விம்பசாரனுக்குத் தாம் வாக்களித்ததை நினைத்து, தமது சீடர்களுடன் இராசகிருகத்தின் அருகில் உள்ள சுபதித்த சேதியத்தில் வந்து தங்கினார். இதனையறிந்த அரசன் தனது சுற்றத்தாருடன் சென்று புத்தரை வணங்க, அவர் அவர்களுக்கு உபதேசம் செய்தார். அன்று முதல் அரசன் பௌத்த மதத்தை மேற்கொண்டான். அடுத்த நாள் அரசன் புத்தரையும் அவரது சீடர்களையும் அரண்மனைக்கழைத்து அவர்களுக்கு விருந்தளித்த பின்னர், அவர்கள் தங்குவதற்கு ‘வெளுவனம்’ என்னும் தோட்டத்தைப் புத்தருக்குத் தானமாகக் கொடுத்தான். அன்றியும், அவன் இறக்கும்வரையில் புத்தருக்கும் அவரது சங்கத்தாருக்கும் பற்பல உதவிகளையும் தொண்டுகளையும் செய்துவந்தான்.


இந்த அரசனுக்கு அஜாத சத்துரு என்னும் மகன் ஒருவன் உண்டு. இப்பிள்ளை பிறக்கும்போதே, இவனால் அரசனுக்கு மரணம் நேரிடும் என்று நிமித்திகர் கூறினர்.


புத்தருக்கு மைத்துனன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தேவதத்தன் என்பது. அவன் புத்தரது தாய் வழி மாமனது மகன். இந்தத் தேவதத்தன், புத்தர் உலகத்தாரால் போற்றிப் புகழப்படுவதைக் கண்டு பொறாமை கொண்டான். பௌத்த சங்கத்தின் தலைவராக வீற்றிருக்கும் புத்தரை நீக்கிவிட்டு, அவர் இடத்தில் தான் அமர்ந்து பெருமையடைய அவாக்கொண்டான். ஆனால், புத்தரும், விம்பசார அரசனும் உயிரோடுள்ளவரையில் தனது விருப்பம் நிறைவேறாதெனக் கண்டு, அவர்களைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான்.


தேவதத்தன் சில சித்திகள் கைவரப்பெற்றவனாகலின், அவன் அரசன் மகன் அஜாத சத்துருவிடம் சென்று, அவன் அஞ்சும்படி சில சித்திகளைச் செய்து, அவனைத் தன்வசப்படுத்தி, அரசனைக் கொன்று அரசைக் கைப்பற்றிக்கொள்ளுமாறும், புத்தரைக் கொன்று பௌத்த சங்கத் தலைமைப் பதவியைத் தனக்களிக்குமாறும் அவனுக்குக் கூறினான். இவனது சித்திகளைக் கண்டு இவனிடம் அச்சமும் மதிப்புங் கொண்ட அரசகுமாரன் இவன் கற்பித்த தீச்செயல்களைச் செய்ய உடன்பட்டான்.


தேவதத்தன், அரசகுமாரன் உதவியால் சில வில்வீரர்களை ஆங்காங்கேயிருக்கச் செய்து, புத்தர் பாதைவழியே செல்லும்போது அவரை அம்பெய்து கொல்லுமாறு ஏவினான். புத்தர் வீதிவழியே சென்றபோது, வில்வீரர்கள் அவர்மேல் அம்பெய்ய முடியாதவர்களாகி விறைத்து நின்றனர். பின்னர், அவர்கள் புத்தரிடம் வந்து அவரிடம் உபதேசம் பெற்றுச் சென்றனர். தனது நோக்கம் நிறைவேறாமற் போனதைக் கண்ட தேவதத்தன், தானே புத்தரைக் கொல்ல முடிவுசெய்து, அவர் பாதைவழியே செல்லும்போது பெரும் பாறைகளை மலைமீதிருந்து உருட்டினான். அவை அவருக்குப் பெரிய ஊறு செய்யவில்லையாயினும், காலில் சிறிது காயத்தையுண்டாக்கின. இதனையறிந்த அவரது சீடர்கள் அவரை வெளியே செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். புத்தர், ‘ததாகதருடைய உயிரைப் போக்க ஒருவராலும் ஆகாது’ என்று சொல்லி, தம் வழக்கம்போல் வெளியே சென்றுவந்தார். பின்னர், தேவதத்தன் அரச குமாரன் உதவியால், ‘நளாகிரி’ என்றும், ‘தனபாலன்’ என்றும் பெயருள்ள மதம்பிடித்த யானையைக் கள்ளூட்டி வெறிகொள்ளச் செய்து, புத்தர் வீதிவழியே செல்லும் போது அவரைக் கொல்ல அதை ஏவினான். அவ்யானை புத்தரைக் கண்டபோது மதமும் வெறியும் தணியப்பெற்று அவரை வணங்கியது.


இவ்வாறு, தேவதத்தன் புத்தரைக் கொல்லச் சூழ்ச்சி செய்திருக்க, அஜாத சத்துரு அரசனைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான். இதனையறிந்த அரசன் தன் மகனுக்கு அரசாட்சியைக் கொடுத்துவிட்டுத் தான் அப்பதவியினின்றும் விலகிக்கொண்டான். ஆயினும், தேவதத்தன் அரசகுமாரனிடம் சென்று, அரசனைக் கொல்லும்படி வற்புறுத்தினான். அதனைக் கேட்டு, அஜாத சத்துரு அரசனைச் சிறைப்படுத்தி, காற்றோட்டமில்லாத ‘பொதியறை’யில் அடைத்து, அரசியைத் தவிர ஒருவரும் அங்குச் செல்லக்கூடாதென்றும், ஒருவரும் அவனுக்கு உணவு கொடுக்கக்கூடாதென்றும் கட்டளையிட்டான். இவ்வாறு சிறைப்பட்ட விம்பசார அரசனுக்கு அவனது மனைவி அவனைக் காணச் செல்லும்போதெல்லாம் தனது உடையில் உணவை மறைத்துக்கொண்டுபோய்க் கொடுத்துவந்தாள். இது கண்டறியப்பட்டபின், தனது தலையணியில் சிறிது உணவை மறைத்துக் கொண்டுபோனாள். இதுவுங் கண்டறியப்பட்டபோது, இந்த அரசி நீராடித் தன் உடம்பில் ‘சாதுர் மதுரம்’ என்னும் நால்வகை இனிப்பு வகைகளைப் பூசிக்கொண்டு அரசனிடம் சென்றாள். அரசன் அவள் உடம்பில் பூசப்பட்ட இனிப்பை நக்கி உண்டு உயிர் வாழ்ந்தான். இதுவும் கண்டுபிடிக்கப்பட்டு, அரசி விம்பசாரனைப் பார்க்கக்கூடாதென்று தடுக்கப்பட்டது. விம்பசாரன் மனம் கவலாமல் பொதியரையாகிய அச்சிறையில் உலாவிக்கொண்டிருந்தான். இதனையறிந்த அஜாத சத்துரு சில மயிர்வினைஞரை அனுப்பி, விம்பசாரனுடைய பாதத்தைக் கத்தியால் கீறியறுத்து, உப்பையும் புளித்த காடியையும் இட்டுக் கட்டுமாறு கூறினான். இக்கொடுஞ் செயலைச் செய்ய மனமற்றவராக இருந்தும், அவ்வூழியர் அவ்வாறே செய்தனர். இக்கொடுமைகளால் ஏற்பட்ட துன்பத்தைத் தாங்கப் பெறாமல், விம்பசாரன் சிறைச்சாலையில் உயிர்நீத்தான்.


விம்பசாரன் உயிர் துறந்த அதே நாளில், அஜாத சத்துருவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தையிடத்தில் தந்தைக்கு உண்டாகும் அன்புணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. தன்னையும் தன் தந்தை இப்படித்தானே நேசித்திருப்பான் என்று கருதி, அவன் தன் தாயிடம் சென்று இதைப்பற்றி வினாவினான். அஜாத சத்துரு பிறந்தது முதல் விம்பசார அரசன் எவ்வாறு அவனை அன்பாக நேசித்தான் என்பதனையும், எவ்வாறு கண்ணுக்குக் கண்ணாயும் உயிருக்குயிராயும் போற்றிக் காப்பாற்றினான் என்பதனையும் அவள் அவனுக்கு விளக்கிச் சொன்னாள். இவற்றையெல்லாங் கேட்ட அஜாத சத்துரு தான் தன் தந்தையாகிய விம்பசார அரசனைக் கொடுமையாய்ச் சித்திரவதை செய்து கொன்றதை நினைத்து வருந்தினான்.


இவ்வரலாற்றினைப் பொருளாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த விம்பசார கதை என்னும் காப்பியம் எனத் தோன்றுகின்றது. இது இயற்றப்பட்ட காலம் தெரியவில்லை. இந்தக் காப்பியத்தினின்று நமக்குக் கிடைத்திருப்பன நான்கு அடிகள்மட்டுமே. அவை பின் வருவன :


‘ உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி

வலம்படு மருங்குல் வடுநோ யுறாமல்

ஆன்றோன் அவ்வழித் தோன்றினன் ஆதலின்

ஈன்றோள் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள்.’


இச்செய்யுள் நடையை நோக்கும்போது, இந்தக் காப்பியம், மணிமேகலையைப் போன்றே ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டிருக்கவேண்டும் எனத் தோன்றுகின்றது.


வலையில் சுட்டது

No comments: