ஆதித்த கரிகாலன் கூறுகிறான்,
"இப்படி நான் தீர்மானித்திருந்த நிலையில், ஒற்றைக் குதிரையின் குளம்படி அந்தச் சோலைக்குள்ளே போயிருப்பதைக் கண்டதும் அளவிலாத வியப்பும் ஆத்திரமும் கொண்டேன். மேலும் சென்று பார்த்தபோது, அடர்ந்த மரங்களின் மறைவில் குதிரை கட்டியிருப்பதைக் கண்டேன். எனவே தப்பி வந்தவன் அந்தக் குடிசை வீடுகளில் ஒன்றில்தான் இருக்க வேண்டும். நந்தினியின் வீட்டுக்குச் சென்று பலகணி வழியாகப் பார்த்தேன். நண்பா! அங்கே நான் கண்ட காட்சி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் என் நெஞ்சில் தீட்டியது போலப் பதிந்திருக்கிறது. ஒரு பழைய கயிற்றுக் கட்டிலில் வீரபாண்டியன் படுத்துக் கிடந்தான். நந்தினி அவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். அவள் முகம் முன் எப்போதுமில்லாத காந்தியுடன் ஜொலித்தது. அவள் கண்களில் இரண்டு துளி கண்ணீர் ததும்பி நின்றது. என்னை மீறி வந்த ஆத்திரத்துடன் கதவைப் படார் என்று உதைத்துத் திறந்து கொண்டு உள்ளே போனேன். காயங்களைக் கட்டிக் கொண்டிருந்த நந்தினி என்னைக் கண்டதும் அதை நிறுத்தி விட்டு முன்னால் வந்தாள். சாஷ்டாங்கமாக என்னை நமஸ்கரித்து எழுந்தாள். கை கூப்பிய வண்ணம், 'ஐயா! நீங்கள் என் பேரில் ஒருநாள் வைத்திருந்த அன்பின் பேரில் ஆணையிட்டு வேண்டுகிறேன். இவரை ஒன்றும் செய்யாதீர்கள்! படுகாயப்பட்டுக் கிடக்கும் இவரை உங்கள் கையால் கொல்ல வேண்டாம்!' என்றாள்.
நான் தட்டுத் தடுமாறி, 'உனக்கும் இந்த மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவன் உயிரைக் காப்பாற்றும்படிக் கேட்கிறாய்?' என்றேன்.
'இவர் என் காதலர்; இவர் என் தெய்வம்; இவர் என்னை மணந்து கொள்ளச் சம்மதித்திருக்கும் தயாளன்!' என்றாள் நந்தினி.
"காயம் பட்டிருந்த வீரபாண்டியனைப் பார்த்துக் கொஞ்சம் உண்டாகியிருந்த இரக்கமும் என்னிடமிருந்து அகன்று விட்டது. இந்தப் பாதகன் சண்டாளன், - எப்படி என்னைப் பழி வாங்கி விட்டான்! என் இராஜ்யத்தையே கைப்பற்றியிருந்தாலும் பாதகம் இல்லை; என் உள்ளத்தில் குடிகொண்டிருந்த பெண்ணரசியையல்லவா அபகரித்து விட்டான்? இவனிடம் எப்படி இரக்கம் காட்ட முடியும்? முடியவே முடியாது!
"நந்தினியை உதைத்துத் தள்ளி விட்டு அவளைத் தாண்டிக் கொண்டு சென்று வாளின் ஒரே வீச்சில் வீரபாண்டியனுடைய தலையை வெட்டி வீழ்த்தினேன். " என்றான் ஆதித்த கரிகாலன்.
இவனது கோழைத்தனமான , வெட்கப்படவேண்டிய செயல் உடம்பெல்லாம் காயத்துடன் நொந்துபோனவனை நோகடித்து சாகடித்த சண்டாளன் தான் இச்சோழன் .
பொன்னியின் செல்வனிலிருந்து
13 comments:
இதப் பாருடா..... ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்....
//இவனது கோழைத்தனமான , வெட்கப்படவேண்டிய செயல் உடம்பெல்லாம் காயத்துடன் நொந்துபோனவனை நோகடித்து சாகடித்த சண்டாளன் தான் //
இதனை வேறு விதமாகவும் நோக்கலாம் என்னார் ஐயா. எந்த எதிரியையும் எந்தச் சூழலிலும் உயிருடன் விட்டு வைக்கலாகாது. பிற்காலத்தில் வீரபாண்டியன் உடல் ஆரோக்கியம் பெற்று சோழர்கள் பல்லாயிரம் பேரை போரில் கொன்று குவித்திருப்பார். வரலாற்றில் அதனைத் தடுக்கவே இப்படிச் செய்திருப்பாரேயன்றி பெண் மோகத்தால் அல்ல என்பது என் எண்ணம்.
ஆமா, கல்கி அவர்கள் நேரில் பார்த்தா எழுதினார்? கற்பனைக் கதை தானே.. :))
மகேஸ்
கற்பனையில் ஓரளவிற்கு உண்மையும் உண்டு புறமுதுகிட்டு ஓடியவனை ஆயுதம் இல்லாதவனை தன் வீரத்திற்கொப்பில்லாதவனுடம் போர் செய்யக்கூடாதென்று வரம்பு உள்ளதே. எது எப்படியோ ஒரு தமிழனை தமிழன் அழித்தது வருத்தம் தான் எந்த சூழ்நிலையில் பாருங்கள்.
// ஒரு தமிழனை தமிழன் அழித்தது வருத்தம் தான் ...//
வர வர இந்தத் 'தமிழின உணர்ச்சிகள்' எவ்வளவு தூரம் போகுமோ என்று பயமாக இருக்கிறது...
ஆண்டவா.. காப்பாற்று...
சீமாச்சு...
எங்கும் போகாது நம் நாட்டிலே இருக்கும் ஆண்டவன் தான் யாரைக் காப்பற்ற வேண்டும்
என்னார், எப்பொழுதுமே நெருப்பு, பகை, இரண்டையுமே மிச்சம் வைக்காமல் ஒழிக்க வேண்டும். இல்லையென்றால் பெரும் விபத்து நேரும். இந்து பஞ்ச தந்திர நீதி!!!;)
தாங்கள் சொல்வது என்னமோ உண்மைதான் அந்த கதையைப் படியுங்கள் எனக்கு மனது கணக்கிறது அதனால் தான் அப்படி சொன்னேன்
ஆயுதமில்லா கர்ணணை அர்ச்சுனன் கொண்றது போல
பொன்னியின் செல்வனில் எனக்குப் பிடித்த பாத்திரம் ஆதித்த கரிகாலன் தான். அவரின் வயதுக்கேற்ற கோபமும் வீரமும் என்னைக் கவர்ந்தவை.
பொன்னியின் செல்வனைப் படித்ததும் 'கடவுள் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், பின் நோக்கிச் சென்று வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் வசதியைத் தா' என்பதாகத்தான் இருந்திருக்கும்.
இப்படியும் சொல்லலாம் என்னார் ஐயா. பின்னால் இருந்து அபிமன்யுவை கர்ணனும் மற்றவரும் தாக்கிக் கொன்றதைப் போல.
எனக்கும் கூட அந்த எண்ணம் உண்டு அதாவது 40 ஆண்டுகளுக்கு முன் நான் அனுபவித்த சுகத்தை இன்று என்னால் அனுபவிக்க முடியவில்லை காவிரியின் நீரை கையால் அள்ளிக்குடிக்கலாம் ஆனால் இன்று குளிப்பதற்கே அசிங்கமாக இருக்கிறது என்ன செய்ய காலத்தின் கட்டாயம் இது.
நன்றி நண்பரே
குமரன்
தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மையே, அரைகுறையான வித்தை ஆபத்தை விளைவிக்கும் என்பது அபிமன்யுவின் கதை நமக்கு ஒரு படிப்பினையே.
// பெண் மோகத்தால் அல்ல//
மகேஷ்! பெண் மோகம் எதையும் செய்ய தூண்டும் என்பது என் கருத்து. மிகுந்த கட்டுப்பாடு இருக்க வேண்டியது அவசியம்.
கண்ணியர்கள் கடைக்கண் கடிகாட்டிவிட்டால் காலையருக்கு பெருமலையும் சிறு கடுகு போல
Post a Comment