Sunday, February 05, 2006

யாகோப்பு

சித்தத்தைச் சிவத்திலே நிறுத்தியவரும் அன்னையின் பேரருளுக்குப் பாத்திரமானவருமான இராமதேவர் வேற்று மதத்தைத் தழுவலாமா? என்று கேட்கலாம்.

சீவனைச் சிவனே என்று உணர்ந்தவர் சித்தர். எல்லா உயிர்களிலும் நிலைபெற்று விளங்குவது சிவனே என்று துணிந்தவர்க்கு சாதி மதம் என்ற வேறுபாடுகளே தோன்ற முடியாது. அவர்கள் எல்லாவற்றையும் கடந்தவர்கள். உடல் பூணும் வேடங்களாலோ, இறைவனைத் தொழும் முறைகளாலோ மனித ஆன்மா கரைபடுவதில்லை. நல்லொழுக்கமும் நல்லெண்ணமும் கொண்டு வாழ்பவன் என்ன வேடம் போட்டாலும் எந்தக் கடவுளைக் கும்பிட்டாலும் அது எங்கும் நிறைந்த ஒரு முழு முதற் பொருளையே சாரும்.

இராமதேவர் சாதி, சமயம், சடங்குகள் எல்லவற்றையும் கடந்த சித்தர். சித்தர்கள் எல்லோருமே அப்படித்தான் அதனால் இது போன்ற வீன் குழப்பத்துக்கு இடம் தரலாகாது.

யாகோபு வெகு விரைவில் மக்கத்து மக்களால் தம்முள் ஒருவராக ஏற்றுக் கொள்ளப் பட்டார், அவர்களைப்போல் உடையணிந்தார். அவர்கள் மொழியில் பேசினார். அவர்களுடைய பிணிகளைப் போக்கினார். வழக்குகளைத் தீர்த்து வைத்தார். அதே சமயம் தான் கண்டுணர்ந்த மருத்துவ உண்மைகள் கால காலத்துக்கும் அம்மக்களுக்குப் பயன் படும்படியாகப் பதினேழு மருத்துவ நூல்களை அரபிமொழியில் பாடி வைத்தார்.

அவருக்குப் பல சீடர்கள் ஏற்பட்டனர். எற்கெனவே யோகியாம் சின்மயத்தில் சேர்ந்த சித்து ஒருவர் அங்கிருந்தார் என்று கூறியுள்ளோம். அவர் யாகோபுக்குப் பிரதம சீடரானார்.

இவ்வாறு தன் சீடர்கள் மூலமாக அரபு நாட்டில் உண்டான பல மூலிகைகளையும் கொண்டு வரச் செய்து அவற்றின் தன்மைகளை ஆராய்ந்தார்.

பாலைநிலத்தில் கடும்வெயிலில் காய்ந்து போய் மணலுக்குள் புதைந்து விடும் மூலிகைகள் பிறகு எப்போதாவது ஈரம் பட்டவுடன் துளிர்த்துப் புத்துயிர் பெறுவதைப் பற்றி அறிந்தார். இவ்வகை மூலிகைகள் பெருமபாலும் பாலைவனச் சோலைகளை அடுத்துள்ள நிலங்களிலேயே முளைத்தன. பலநாள் மணல் வெளியாகக் கிடந்த இடத்தில் திடிரென்று துளிர்கள் உண்டாகி பச்சைப் பசேலென்று ஒரு புதர் உண்டாகி விடும் "ஆ! என்னே விந்தை ! இந்த மூலிகைகள் உயிர்ச்சத்தைப் பிடித்து வைத்துக் கொள்ளும் விந்தைதான் என்ன? இவை அற்புதமான கற்ப மருந்துகளாகப் பயன்படும் அல்லவா? “ என்று நினைத்தார். அதைப்பற்றி யெல்லாம் தன் நூல்களில் எழுதினார்.

கற்ப மூலிகைகளின் திறனைச் சோதிப்பதற்காகத் தாம் சமாதியில் இருக்க விரும்பினார் . அதைப் பற்றித் தம் சீடர்களிடம் பேசினார் . அவர்களால் நம்ப முடியவில்லை . “நான் சமாதியில் அமர்வேன். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்று எழுவேன்,” என்று யாபோபு கூறினார். சீடர்களால் நம்ப முடியவில்லை .
(சற்று யோசியுங்கள் எப்படி அந்த மூலிகைகள் உணவு இன்றி உயிர் வாழ்ந்தன அது போல தாமும் இருக்கப் பார்த்திருப்பாரோ சமாதிக்குள் ?)

ஆனால் குருவாக்கை மீற முடியுமா?

சமாதிக்கு இடம் தெரிவு செய்யப்பட்டது. குழி தோண்டப்பட்டு உட்சவர்கள் கட்டப்பட்டன. யாகோபு சமாதியில் இறங்கி நின்று கொண்டு சீடனிடம் கூறுவார்.

இறங்கியே சமாதிதனில் இருந்து கொண்டு
எழிலாகச் சீடனுக்கு அதிதம் சொல்வார்
சுரங்மென்ற குழிதனிலே போறேன் அப்பா
சுருதிபொருள் கருவி கரணாதி யெல்லாம்
அரங்கமுடன் உள்ளடக்கி மனதிருத்தி
வையத்தின் வாழ்க்கை எனும் தனை அகற்றி
உரங்களுடன் பத்தாண்டு இருப்பே னென்று
உத்தமனார் யாகோபு கூறினாரே


" நான் பத்தாண்டுக் காலம் சமாதியில் இருப்பேன். பிறகு நான் வெளியே வருவேன். சமாதியிலிருந்து நான் வெளிவரும் காலத்தில் பல அற்புதங்கள் நிகழும். தேன் மாரி பொழியும். நறுமலர்கள் பூத்து மணம் கமழும் . விலங்குகள் கூட ஞானம் பேசும். இந்த மாதிரி அடையாளங்களைக் கொண்டு நான் திரும்பிவரும் நாளை நீ தெரிந்து கொள்ளலாம் ,” என்று கூறிச் சமாதியை மூடிவிடச் சொன்னார்.

பத்தாண்டுகழிந்தன. யாகோபு சொன்னதுபோல் திரும்பிவந்தார். தன் உண்மைச் சீடன் சமாதியருகிலேயே இருந்தது கண்டு மிகவும் மகிழ்ந்தார். அவனுக்கு வேண்டிய உபதேசங்களைக்கூறியபின் தான் சமாதிக்குச் சென்றதன் பின் அங்கு என்ன நடந்தது என்று கேட்டார் . சீடன் சொன்னான் , “குருவே நீங்கள் சமாதிக்குச் சென்றவுடன் பெருங்கூட்டம் கூடியது. யாகோபு சமாதிக்குப் போய்விட்டார். இனிமேல் திரும்பி வரமாட்டார். அவருடைய உடல் மண்ணாய்ப்
போகும்,” என்றெல்லாம் மிகவும் கேவலமாகவும் ஏளனமாகவும் பேசினார்கள்.

கூச்சலுடன் வெகு மாண்பர் கும்பல்கூடி
குவலயத்தில் வேகமுடன் வார்த்தை சொன்னார்
ஏச்சாகக் கூறினதோர் மொழிகட்கெல்லாம்
எதிராக யான் ஒன்றும் பேசேன் பாரே

பாரேதான் வெகுகாலம் சமாதி பக்கம்
பாரினிலே வருவாரும் போவருண்ட
நேரேதான் அவர்களிடம் வார்ததை பேசேன்
நேர்மையுடன் சமாதியிடம் பள்ளி கொள்வேன்
கூரேதான் சமாதியிடம் இருந்து கொண்டு
கொப்பெனவே தேவர்வரும் காலம் மட்டும்
ஊரேதான் போகாமல் காத்திருந்து
உறுதியுடன் சேவையது கண்டிட்டேனே.

பலபேர் பலவிதமாகக் கூச்சல் போட்டுப் பேசினார்கள். நான் எதையுமே காதில் கோட்டுக் கொள்ளவில்லை. சமாதிக்குப் பக்கத்திலேயேபடுத்துத் தூங்கினேன். இரவும் பகலும் இங்கேயே காவலுக்கு இருந்தேன். ஒருதடவைகூட நான் என்னுடைய ஊருக்குக் கூட போகவில்லை என்று சீடன் கூறினான்.

அந்தச் சீடனின் அன்பு யாகோபின் மனம் நெகிழச் செய்தது .”அப்பனே அவர்கள் பேசியதில் தவறில்லை . இந்த மானிட தேகம் நிலையானது அல்ல . காயகற்பம் உண்டுகாயத்தைச் சித்தி செய்து நான்கு யுகங்கள் வாழிந்தாலும் பிறகு ஒருநாள் இந்த உடல் மண்ணாய்த் தான் போகும். நான் மறுபடியும் சிறிது காலம் சமாதியில் இருக்க விரும்புகிறேன், இந்த முறை முப்பது ஆண்டுகள் கழிந்த பிறகே வருவேன். நான் சமாதிக்குச் சென்ற பிறகு என்னைப் பற்றித் தவறாகப் பேசியவர்களுக் கெல்லாம் கண் குருடாகப் போய் விடும்.” என்று கூறிவிட்டு மறுபடியும் சமாதியில் இறங்கிவிட்டார்.

சமாதியின் மேல் பாறை கொண்டு மூடப்பட்டது.

சமாதியைப் பார்க்க வந்தவர்கள்,” அடப்பாவமே! இனி யாகோபு திரும்பி வருவதேது?” என்று ஏளமாகப் பேசினவர்கள் உடனேகண்களின் பார்வை போய்விட்டது. அது மாட்டுமா?

குருடராய்ப் போனவர்கள் சிலது மாண்பர்
குவலயத்தில் அழிந்தவர்கள் சிலது மாண்பர்
திருடாரய் ஒளிந்தவர்கள் சிலது மாண்பர்
தீர்க்கமுடன்.வாய்குளறிச் சிலது மாண்பர்

கண்கெட்ட பிறகு " ஐயோ இப்படி ஆகி விட்டதே என்று அடித்துக் கொண்டார்கள். வாய்க் கொழுப்பால் வந்த வினை தீருமா? என்று அழுதார்கள்.

முன் நின்று யாக்கோபு வருவ தெப்போ
மூவுலகில் சாபமது தவிர்வதெப்போ
மன்னரவர் மாண்பர்களின் வரம் கொடுக்கும் காலம் எப்போ


என்று அழுது புலம்பியபடி அங்கேயே காத்துக் கிடந்தார்கள். ஆண்டுகள் பலகழிந்தன. இதனிடையே செத்தவர்கள் பலர் இருந்தவர்கள் பலர்


கோடியாம் சிலபேர்கள் ஞானவான்கள்
கவலயத்தில் வெகு நாளாய்ப் பேருண்டாக
நாடியேசமாதியிடம் கிட்டிருந்து
நாதாந்தப் பேரொளிவின் சமாதி முன்னே
வடியயே காத்திருந்த சீடர் தாமும்
வண்மையுடன் உபதேசம் பெற்றார் தானே

காத்திருந்த சீடரகள் முப்பதாண்டுகளுக்குப் பிறகு சமாதியிலிருந்து வெறிவந்த யாகோபின் தரிசனம் பெற்றார்கள. சோதி வடிவாக வெளிவந்த யாகோபு அவர்களுடைய குறைகளை நீக்கினார். ஆனால் அவருக்கு மெக்காவின் வாழ்க்கை அலுத்து விட்டது. சீவன் முத்தி பெற வேண்டு மென்றால் தமிழகத்திற்குச் சென்றாக வேண்டும் என்று தோன்றியது.

சிறிது காலம் தன் சீடர்களுடன் இருந்து அவரகளுக்கு வேண்டிய உபதேசங்களைச் செய்தபின் " நான் மறுபடியும் சமாதிக்குச் செல்கிறேன் இனித் திரும்பி வரமாட்டேன் ,” என்றார்.

சீடர்கள் திடுக்கிட்டார்கள். சிலர் அழுதார்கள். சிலர் தொழுதார்கள். நீங்கள் போகக் கூடாது இங்கேயே இருக்க வேண்டும் என்று வேண்டினார்கள்.

“ அட மூடர்களே அப்படியே நான் இருந்தாலும் நான் இருக்கும் காலம் வரை நீங்களும் என்னுடனேயே இருப்பீர்கள் என்று உறுதி கூற முடியுமா? பிறந்தவர் எல்லோரும் போயே ஆகவேண்டும். இந்த உடல் தான் அழியக் கூடியதே தவிர ஆன்மாவுக்கு அழிவில்லை. அதனால் அழாதீர்கள். நான் என்றும் உங்களுடனேயே இருப்பதாக நினையுங்கள்,” என்று கூறி விடை பெற்றுச் சமாதி புகுந்தார்.

யாகோபு மெக்காவில் சமாதியடைந்ததாகக் கூறுவார்கள். ஆனால் அவர் சமாதியிலிருந்து வெளிப்பட்டுத் தமிழகம் வந்து சதுரகிரியில் சிறிது காலம் தங்கியிருந்து தாம் மெக்காவில் இருந்த போது அரபி மொழியில் எழுதிய மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதினார். பிறகு சதுரகிரியில் இராமதேவர் வனத்தில் சென்று சில காலம் தங்கினார். அதன்டபின் அழகர்மலையை அடைந்து அங்கே சமாதியடைந்தார்.

தமிழகம் திரும்பி வந்த பிறகு தமது ஆசிரமத்திற்குச் சென்றபின் அவர் இராமதேவராகவே மாறிவிட்டார். அதனாலேயே அழகர்லையில் சமாதியடைந்தவர் இராமதேவர் என்றே கூறப்படுகிறது.
முற்றும்

2 comments:

குமரன் (Kumaran) said...

இராமதேவரைப் பற்றி கொஞ்சமாகக் கேள்விப் பட்டிருக்கிறேன் ஐயா. உங்களின் இந்தப் பதிவைப் படித்து மேலும் தெரிந்து கொண்டேன். அவர் சமாதி அடைந்த இடம் அழகர்மலை என்று சொல்லியிருக்கிறீர்கள். அது மதுரை பக்கத்தில் இருக்கும் அழகர் கோவில் மலை, திருமாலிருஞ்சோலை மலையா?

ENNAR said...

குமரன் தெரிந்து சொல்கிறேன்
நன்றி குமரன்