Wednesday, February 08, 2006

திருச்சிராப்பள்ளி - 3 -


அரசியல் வரலாறு

சங்க காலத்தில் உறையூரைத் தலைநகராக் கொண்டு ஆண்ட சோழ மன்னர்கள் காந்தமன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன், உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி. கரிகாலன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், நலங்கிள்ளி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, வேற்பஃறடக் கைப்பெருவிரற்கிள்ளி, செங்கணான் நல்லடி என்போராவர். இவர்களை முற்காலச் சோழர்கள் எனலாம். இவர்களுக்குப்பிறகு களப்பிரர்கள் வருகையில் சோழராட்சி முடிவுற்றது. களப்பிரர்கள் கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

களப்பிரர்களுக்குப்பின் சோழ நாட்டை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். இவர்களில் முக்கியமானவர் முதலாம் மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் ஆவார்கள். கி.பி.600-630 வரை ஆட்சி செய்த முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில், திருச்சிராப்பள்ளி பல்லவ அரசின் தெற்கு எல்லையாக இருந்திருக்கிறது. மலைக்கோட்டையில் மகேந்திர் வர்மன் குகைக் கோயில்களை அமைத்தான். அவை "லலிழதாங்குர பல்லவவேசுர கிரஹம்" என அழைக்கப்படுகின்றன. பெருவளநல்லூரில் சாளுக்கிய மன்னன் விக்கிரம ஆதித்தனைப் பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மன் எதிர்த்து போரிட்டுள்ளான். முசிரிக்கருகழிலுள்ள மகேந்திர மங்கலம், திருவெள்ளறையில் காணப்படும் இரண்டாம் நந்திவர்மனின் கல்வெட்டுகள், லால்குடி, ஆலம்பாக்கம் பகுதியிலுள்ளபல்லவர்காலத்துக் கல்வெட்டுகள் - இவைகள் இம்மாவட்டத்தில் பல்லவர்களின் ஆளுகையைப் பறைசாற்றுகின்றன. கி.பி. 650 முதல் 860 வரை பல்லவப் பேரரசுக்கு உட்பட்டு முத்தரையர்கள், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டைப் பகுதிகளை ஆட்சி புரிந்தனர்.

முத்தரையர்களில் சாத்தன் மாறன், குவாவன் மாறன், குலாவாஞ்சாத்தான், சுவரன் மாறன், சாத்தம் பூதி, சாத்தம் பழியிலி போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள் செந்தலை என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்களுக்குப் பின் வந்த இளைய பரம்பரையினர் மலையடிப்பட்டியை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர்.

கி.பி.9 ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஆதித்த சோழன் காவிரியின் இருகரைகளிலும் பல கோயில்களைக் கட்டியுள்ளான் என அன்பில் செப்பேடு கூறுகிறது. சுந்தர சோழன், உத்தம சோழன் முதலிய சோழ மன்னர்கள் பெருங்குடி, பாச்சூர், கோபுரப்பட்டி போன்ற ஊர்களை நிர்மாணித்துள்ளனர். பராந்தக சோழனின் கல்டிவெட்டுகள் அன்பில், ஸ்ரீரங்கம், திருச்செந்துறை, உய்யக்கொண்டான் திருமலை. திருவெறும்பூர், அந்த நல்லூர் முதலிய கோயில்களில் காணப்படுகின்றன.

முதலாம் இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் போன்ற பிற்காலச் சோழ மன்னர்களின் கல்வெட்டுகக்களும், பல கோயில்களுக்கு அவர்கள் அளித்த நிவந்தங்களும், மாவட்டத்தில் பரவலாக் காணப்படுகின்றன.

தஞ்சையைத் தலைநகராக் கொண்டு ஆட்சி செய்த சோழர்கள் காலத்துக்குப் பின் பாண்டியர்கள், சோழ நாட்டைக் கைப்பற்றி அரசாண்டனர். அதுபோது பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் திருச்சிராப்பள்ளி இருந்தது. மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுக்கள் ஸ்ரீரங்கம், திருவெள்ளரை, திருவானைக்காவல்கோயில்களில் பாண்டிய மன்னர்கள் கோபுரங்களை எழுப்பியுள்ளனர்.

பாண்டிய மன்னர்களுக்குப் பின் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் ஹொய்சளர்கள் படையெடுத்து வந்து ஆட்சியைக் கைப்பற்றிச் சிலகாலம் அரசாண்டனர். ஹொய்சாள மன்னர் வீரசோமேஸ்வரன் சமயபுரத்தைச் சேர்ந்த கண்ணூர் பகுதியைத் தலைநகரமாகக் கொண்டு பதின் மூன்றாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தான். இங்குள்ள சிவன்கோயிலை வீரசோமேஸ்வரன் கட்டியுள்ளான். இவனது மகன் வீரராமனாதன் காலத்தில் கண்ணனூர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருவெள்ளரை கோயில்கள் பெரும் சிறப்புப் பெற்றிருந்தன.

ஸ்ரீரங்கத்திலுள்ள கலையழகு மிக்க வேணுகோபலசன்னதி வீரராமனாதன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். மேலும் இம்மன்னன் கண்ணனூர் நகருக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிசெய்து தந்துள்ளான் என்ற செய்தியை இங்கு நடந்த அகழ்வாராய்ச்சிமூலம் அறிகிறோம்.

1310 இல் டெல்லி சுல்தானின் படைத்தளபதி மாலிக்காபூர் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்து உறையுரை வென்றான். இதன் பின்னர் சில காலம் தமிழகத்தில் மொகலாயர் ஆட்சி நிலவியது. கி.பி. 1371 இல் விஜய நகரத்திலிருந்து 'குமாரகம்பனர்' படையெடுத்து வந்து. ஆட்சியைக் கைப்பற்றினார். இதனால் தமிழகம் விஜயநகரப்பேரரசின் கீழ் வந்தது. பின்னர் மதுரை நாயக்கர்களின் ஆட்சி தொடங்கிற்று.

ஆதாரம் நடந்தாய் வாழி

4 comments:

நல்லவன் said...

மலைகோட்டை படம் சூப்பர்
பதிவும் தான்

ENNAR said...

முழுவதும் படிக்கவில்லையா

மதுமிதா said...

நன்றி என்னார்
அகஸ்தியர் ஹிந்தி கைடில்
மலைக்கோட்டை பார்த்துப்பார்த்து அங்கு வர விருப்பம்.

சந்தர்ப்பம் கிடைத்து
மலைக்கோட்டையில் ஏறியதும்
நேரம் கடந்துவிட்டது என்று
மூடி விட்டதால் மேலே வரை போக முடியவில்லை.
ஒரு நாள் கண்டிப்பாக வந்து பார்க்கணும்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.
விஜயநகர ஆட்சிக்கால கல்வெட்டு கிடைக்குமென்றால் எனக்கு சொல்லுங்களேன்.
நேரில் வந்து புகைப்படங்களுடன் தகவல் சேகரிக்கணும்.

ENNAR said...

நன்றி மதுமிதா
திருச்சி உறையூர் பகுதி பண்டமங்கலத்தில் ,சோழன் மலை என்று ஒரு சிறிய மலை உள்ளது அங்கே கல்வெட்டுகள் உள்ளன அதை படிப்பது கடிணம். அதற்கு பக்கத்தில் கால்வாய் போகிறது அந்த கால்வாயின் நடுவே ஒரு சுரங்கம் இருப்பதாகவும் அதன் வழியாக தஞ்சை மலைகோட்டைக்கு சுரங்கம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதைப்பற்றி எனது பதிவுகளில் விவரமாக எழுதுகிறேன்.
அந்த மலைக்கு பக்கத்தில் காராயி அம்மன் கோயில் உள்ளது அங்கும் தூணில் கல்வெட்டுகள் உள்ளன என்னால் படிக்க இயலவில்லை.