தூயவளனார் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றுப் பின்னர் சென்னை சென்று ப்ளீடர் (வக்கில்) பரிட்சையில் முதல் பிரிவில் தேறி, ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.
பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த "அபிநவபாரத்" சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. இச்சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார்.
1909இல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். இதனால் வ.வே.சு உட்பட பலரும் தலைமறைவாயினர்.
லண்டனில் இருந்த வ.வே.சு மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் சுற்றிவிட்டு, 1910இல் இந்தியா வந்து புதுச்சேரியில் தங்கினார். இங்கு பாரதி, நீலகண்ட பிரம்மச்சாரி, வ.ரா. அரவிந்தர் போன்றவர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராட முன்வந்தார். இங்கு "தர்மாலயம்" என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். அவரால் இங்குப் பயிற்சிக் கொடுக்கப்பட்டவர் தான் கலெக்டர் ஆஷை கொன்ற வாஞ்சிநாதன். ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது.
1920ல் பொது மன்னிப்புப் பெற்று வ.வே.சு திருச்சிராப்பள்ளி வந்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரகனேரி இல்லம் வந்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். 1920இல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். இராஜதுவேஷ குற்றம் சாட்டப்பட்டு பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து பின்னர் விடுதலையானார். 1922இல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தையும் அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924இல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார்.
மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார். கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார். மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, கம்பராமாயணம் ஓர் ஆராய்ச்சி போன்ற நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் "லண்டன் கடிதம்" என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார். இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜுன் 4ல் அணைந்தது
சு. முருகானந்தத்தின் நடந்தாய் வாழியிலிருந்து
http://bharani.dli.ernet.in/pmadurai/mp102.html
No comments:
Post a Comment