
மும்பை குண்டுவெடிப்பு: நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி- `தடா' கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
மும்பை, நவ. 28-
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 257 பேர் பலியானார்கள்.
குண்டு வெடிப்பு வழக்கை மும்பை தடா கோர்ட்டு விசாரித்தது. இதன் தீர்ப்பை பகுதி பகுதியாக வழங்கி வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட 123 பேரில் 86 பேர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டனர். 23 பேர் விடுவிக்கப்பட்டனர்.
குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் மீதும் குற்றச்சாட்டு இருந்தது. அவர் தனது வீட்டில் 3 ஏ.கே.56 ரக துப்பாக்கிகள், 9 எம்.எம். பிஸ்டல், கையெறி குண்டுகளை பதுக்கி வைத்திருந்தார்.
குண்டு வெடிப்பு சதிகாரர் கள் மேமன், அபுசலீம் ஆகியோர் இந்த ஆயுதங்களை சஞ்சய் தத்துக்கு கொடுத்திருந்தனர். இதனால் அவர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.சஞ்சய்தத் 112-வது நபராக சேர்க்கப்பட்டு இருந்தார்.
குண்டுவெடிப்பு சதி திட்டத்தில் பங்கு இருப்பதாக கூறி சஞ்சய்தத் 2 தடவை கைது செய்யப்பட்டார். 1994 ஏப்ரலிலும், 1994 ஜுலையிலும் போலீசார் அவரை கைது செய்தனர். 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாக தடா வழக்கில் 2 பிரிவுகளிலும், சதி திட்டம் தீட்டியதாக இந்திய குற்றவியல் சட்டத்தின் ஒரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர் 18 மாதம் ஜெயிலில் இருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சஞ்சய் தத் மீதான குற்றச்சாட்டில் தீர்ப்பளிக்க அவரை ஆஜராகுமாறு இதற்கு முன்பு 2 தடவை தடா கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் 2 தடவையும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தடா கோர்ட்டு இன்று சஞ்சய் தத்தை கோர்ட்டில் ஆஜராகும் படி உத்தரவிட்டது. இன்று தீர்ப்பு கூறப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் மும்பையில் பதட்டம் நிலவியது.
இன்று காலை கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று சஞ்சய் தத் வழிபட்டார். பிறகு தடா கோர்ட்டுக்கு வந்தார்.
அவருடன் அவருடைய சகோதரியும், எம்.பி.யுமான பிரியா தத் மற்றும் நண்பர்கள் வந்தனர். பத்திரிகையாளர் வாகனம் உள்பட 25-க்கும் மேற்பட்ட கார்கள் அவரது காரை பின் தொடர்ந்து வந்தன. கோர்ட்டு முன்பு கார் நிறுத்தப்பட்டது.
சஞ்சய்தத் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். காரை விட்டு இறங்கியதும் அவர் தனது நண்பர்களை கட்டிப்பிடித்தார். அவர்கள் சஞ்சய்தத் முதுகில் தட்டி ஆறுதல் சொன்னார்கள்.அதன்பிறகு சஞ்சய்தத் மீண்டும் கோர்ட்டுக்குள் சென்றார்.
சஞ்சய் தத் வழக்கு தீர்ப்பு கூறப்படுகிறது என்பதை அறிந்ததும் அவருடைய ரசிகர்கள் ஏராளமானோர் கோர்ட்டு முன்பு திரண்டனர். பொதுமக்களும் ஆர்வத்துடன் குவிந்து இருந்தனர்.
இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
சஞ்சய்தத் ஆயுதங்களை வைத்திருக்க உதவியதாகவும் பின்னர் அவற்றை அழித்ததாக வும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் தொடர்பாக இன்று முதலில் தீர்ப்பு கூறப்பட் டது.
இதில் சோம்நாத் தபா என்ற சுங்கத்துறை கூடுதல் கமிஷனரும் ஒருவர். அவர் குற்றவாளி என்று நீதிபதி கோடே தீர்ப்பு கூறினார். சோம்நாத் தபா சஞ்சய்தத்துக்கு சென்ற ஆயுதங்களை தடுக்க தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
அதன்பிறகு நீதிபதி கோடே, நடிகர் சஞ்சய் தத் தொடர்பான வழக்கை எடுத்தார்.
சஞ்சய் தத் ஆயுத தடுப்பு சட்டப்படி குற்றவாளி என்று அவர் தீர்ப்பு கூறினார். ஆனால் அவர் மும்பை குண்டு வெடிப்புக்கு சதி செய்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் நீதிபதி கூறினார்.
தீர்ப்பை கேட்டதும் சஞ்சய் தத் அதிர்ச்சி அடைந்தார். கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. தீர்ப்பு விவரம் தெரிய வந்ததும் வெளியே திரண்டிருந்த ரசிகர்களும் கலக்கம் அடைந்தனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் போலீசார் தயார் நிலையில் நின்றனர்.
சஞ்சய் தத்துக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்பதை நீதிபதி பின்னர்தான் அறிவிப்பார். ஆயுத தடுப்பு சட்டப்படி குறைந்த பட்சம் 5 வருடம் வரை ஜெயில் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
அதே சமயத்தில் அதன் மற்றொரு பிரிவின் கீழ் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். எனவே சஞ்சய்தத்துக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
மாலை மலர்
2 comments:
என்னார் சார், செய்தி முக்கியமான செய்திதான்.பதிவிட்டு சக நண்பர்களுக்குத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி
நன்றி சார்
Post a Comment