Thursday, August 10, 2017

திருமங்கையாழ்வார்



திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது. ஒன்று முதல் ஏழு முடிய ஏறி ஏறி இறங்கி, இறுதியில், ஒன்றாய் விரிந்து நின்றனை என்று அமைத்திருக்கிறார். குடந்தை ஆராவமுதப் பெருமாளைப் பாடியதாகச் சொல்கிறார்கள். இதை, தேர் வடிவத்தில் கோலம் போல எழுத முடிகிறது. ரதபந்தம் என்றும் பெயர் சொல்கிறார்கள். கவிதைக்கு ஒரு பயிற்சியாக இருக்கும் இந்தப் பாட்டு ஆழ்வாரின் பல் திறமையைக் காட்டுகிறது.
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து
மங்கையர் இருவரும்
மலரன அங்கையில் முப்பொழுதும்
வருட அறிதுயில் அமர்ந்தனை,
நெறிமுறை நால்வகை
வருணமும் ஆயினை
மேதகும் ஐம்பெரும்
பூதமும் நீயே அறுபதம்
முரலும் கூந்தல் காரணம், ஏழ்விடை
அடங்கச் செற்றனை அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்
ஓதியை ஆகத்து இருத்தினை அறமுதல்
நான்கவையாய்
மூர்த்தி மூன்றாய்
இருவகைப் பயனாய்
ஒன்றாய் விரிந்து
நின்றனை.
இவ்வாறு 1234567654321 என்று ஏற்ற இறக்கத்தில் அனாயாசமாகக் கவிதை புனைந்திருக்கிறார். திருமங்கை மன்னனின் இரண்டு திருமடல்களும் மிகுந்த இலக்கிய சர்ச்சைக்கு உள்ளானவை. அவைகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
தமிழில் அகத்துறை நூல்களில் மடல் ஒரு வகை. இதை பக்தி இலக்கியத்தில் முதலில் பயன்படுத்தியவர் திருமங்கையாழ்வார். மடல் என்றால் பொதுவாக இதழ் என்று பொருள். சங்க இலக்கியங்கள் மடல் என்று பெரும்பாலும் பனை மடலையே குறித்தன. விரும்பிய பெண்ணை அடைய முடியாத நிலையில் மடலேறியாவது அவளைப் பெறுவேன் என்று பனை மடல்களால் ஆன குதிரை வடிவம் அமைத்து ஊர் நடுவே ஒரு பைத்தியக்காரன் போலக் காதலன் தோன்றிப் பிடிவாதமாக அடம் பண்ணி அடையும் ஒரு விதமான முரட்டுக் காதல் வகை இது. அவன் மேல்
இரக்கம் கொண்டு பெண்ணைப் பெற்றவர்கள் திருமணத்துக்கு சம்மதித்துத் தொலைப்பார்களாம். இந்த வழக்கத்தை மாற்றி மென்மையாக்கிய பெருமை திருமங்கையாழ்வாருக்கு உரியது. இயற்பா என்கிற பிரிவில் திருமங்கையாழ்வாரின் இரண்டு மடல்களும் வருகின்றன. திருமால் மீது காதல் கொண்ட பெண், அவனை அடைய முடியாத நிலையில் மடல் ஏறத் துணிந்ததாக இரு மடல்களிலும் பாடிப் புரட்சி செய்திருக்கிறார். தொல்காப்பியம் பெண்கள் மடலேறுதல் கூடாது என்கிறது. திருக்குறளும் கடல் போலக் காமம் இருந்தாலும் மடல் ஏறத்தயங்குவாள் என்று பெண்ணின் பெருமையைப் பேசுகிறது. திருமங்கையாழ்வாருக்கும் இது தெரியும்.
அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டதுண்டு அதனை யாம் தௌ¤யோம்.
பெண்கள் வதந்தி பரவ, ஆண்களுக்காக மடல் ஏற மாட்டார்கள் என்று தமிழ் நூல்களில் (தென்னுரை) கேட்டதுண்டு என்று தெரிந்திருந்தும் பாடுகிறார்.
திருமங்கையாழ்வார் காலத்துக்கு (8ம் நூற்றாண்டு) முன்பு பெண்கள் மடலேறுவதாக ஒரு சில குறிப்புகள் கலித் தொகை போன்ற சங்க நூல்களில் உள்ளன. ஆனால் அவையெல்லாம் காதலன் கிடைக்கவில்லை என்றால் பெண்ணாகிய நான் சம்பிரதாயத்தை மீறி மடலூர்ந்து வருவேன் என்று அச்சுறுத்தும் வகையில்தான் உள்ளன. நம்மாழ்வாரும் யாம் மடல் ஊர்ந்தும் எம்ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணந் துழாய் மலர் கொண்டு சூடுவோம் என்று மடல் ஊர்ந்தாவது அவனை அடைவேன் என்கிறாரே தவிர முழுவதுமாக மடல் எழுதி அமைத்தவர் திருமங்கையாழ்வாரே. கடவுள் தலைவனாக இருந்தால் பெண்கள் மடலேறலாம் என்கிற விதியை ஆழ்வாரின் இரு மடல்களின் அடிப்படையில் பன்னிரு பாட்டியல் என்னும் நூல் கூறுகிறது.
இந்த காலகட்டத்தில்தான் மடலிலும் புதுமை செய்திருக்கிறார்.
நீரேதும் அஞ்சேல்மின் நும்மகளை நோய் செய்தான் ஆரானுமல்லன் அறிந்தேன் அவனை நான் கூரார் வேற்கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ ஆரால் இவ்வையம் இவ்வையம் அடியளப் புண்டது தான் ஆரால் இலங்கை பொடி பொடியாய் வீழ்ந்தது மற்று ஆராலே கன்மாரி காத்ததுதான் ஆழிநீர் ஆரால் கடைத்திடப்பட்டது அவன் காண்மின்
பயப்படாதீர்கள் உம் மகளுக்கு காதல் நோய் கொடுத்வன் வேறு யாருமில்லை. எனக்கு அவனைத் தெரியும். உங்களுக்கு அறியுமாறு சொல்கிறேன். யாரால் உலகம் மூன்று அடிகளால் அளக்கப்பட்டது. யாரால் இலங்கை பொடிப்பொடியாயிற்று, யாரால் கன்றுகள் மழையிலிருந்து காப்பாற்றப்பட்டன, யார் பாற்கடலைக் கடைந்தது அவன்தான்.
போரானை பொய்கைவாய் கோட்பட்டு நின்று அலறி நீரார் மலர்க்கமலம் கொண்டோர் நெடுங்கையால் நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆரிடரை நீக்காய்
பொய்கையில் அகப்பட்ட போர் யானை தன் துதிக்கையில் தாமரைப் பூவை உயர்த்தி நாராயணா என் கஷ்டத்தை நீக்காயோ என்றபோது வந்து காப்பாற்றினவன். இவ்வாறு சிறிய திருமடல் முழுவதும் நாராயணன் என்கிற பெயருடன் எதுகை.
பெரியதிருமடலில் அதுபோல் கண்ணன் என்பதுடன் முழுவதும் எதுகை பயில்கிறார் (எதுகை என்றால் போரா, நீரா, வாரா, நாரா என்று ஆரம்பச் சீரில் பயிலும் _ ஓசை ஒற்றுமை)
பெரிய திருமடலில் விஷ்ணுவுக்கு ஏற்பட்ட பல ஊர்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறார். 220ம் வரியிலிருந்து வரிசையாக ஒவ்வொரு ஊரையும் அழகாகச் சொல்கிறார்.
அந்த ஊர்கள்: திருவிண்ணகர், குடந்தை, திருக்குறுங்குடி, திருச்சேறை, திருவாலி, திரு எவ்வளூர், திருக்கண்ணமங்கை, திருவெள்ளறை, திருப்புட்குழி, திருவரங்கம், திருவல்லவாழ், திருப்பேர்நகர், திருக்கோவிலூர், திருவழுந்தூர், தில்லைச் சித்திரக்கூடம், திருவேங்கடம், திருமாலிரும்சோலை, திருக்கோட்டியூர், திருமையம், திரு இந்தளூர் கச்சி, திருவேளுக்கை, திருவெஃபா, திருவிடவெந்தை, கடல்மல்லை, திருத்தண்கா, ஊரகம், அட்டபுயகரம், திருவாதனூர், திருநீர்மலை, திருப்புல்லாணி, திருநாங்கூர், திருக்கண்ணபுரம், திருநறையூர் மணிமாடக் கோயில் _ இவ்வாறு தென்னாட்டில் உள்ள வைணவத் தலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுவிடுகிறார். ஆழ்வார்களிலேயே மிக அதிகம் அலைந்தவர் திருமங்கை மன்னன்தான். அவரால் பாடப்படவில்லையென்றால் அந்தக் கோயில் பிற்காலத்தது என்று சொல்லிவிடலாம். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன. இவைகள் எல்லம் இன்றும் உள்ளன. போய்ப் பாருங்கள். எட்டாம் நூற்றாண்டுக்கு உரிய மரியாதையுடன் அவைகளைப் பாதுகாத்திருக்கிறோமா பாருங்கள். வருத்தப்படுவீர்கள். இவைகள் எல்லாம் உலகின் பாரம்பரியச் சொத்து.
திருமங்கை மன்னனின் வாழ்வின் வீச்சும் கவிதையின் வீச்சும் அவரை நம்மாழ்வாருக்கு அருகில் கொண்டு செல்கின்றன. நிறைய சம்பாதித்தார், நிறைய அனுபவித்தார், நிறைவாக வாழ்ந்தார், காதலித்தார் _ முதலில் பெண்களை, பின்பு திருமாலை. எல்லா வகைப் பாடல்களையும் முயன்று அருமையான கவிதைகள் படைத்தார். பல கோவில்களைச் செப்பனிடத் திருப்பணிகள் செய்வித்தார். எல்லாவற்றையும்விட திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் உள்ள கம்பீரம் நம்மை பிரமிக்க வைக்கும்.
இந்திரர்க்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இருநிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய் செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சமே.
இந்திரனின், பிரம்மாவின் தலைவன், நிலம், காற்று, நெருப்பு, நீர், ஆகாயம் ஐந்து பூதங்களும் அவன், தமிழும் அவன், வடமொழியும் அவன், நான்கு திசைகளும் அவன், சூரிய சந்திரனும் அவன், தேவர்களாலும் அறியப்படாத உத்தமன், வேத மந்திரமும் அவன்தான். அறியாத நெஞ்சமே அவனை மறக்காமல் இருந்தால் சிறப்பாக வாழலாம்
நன்றி

No comments: